தமிழ்நாடு

சட்டப்பேரவைக்குள் குட்கா: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

DIN

சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களைக் கொண்டு வந்ததாக அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வா் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமைக்குழு தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டு தமிழக அரசு, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை விதித்தது. தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்ததாக, அப்போதைய எதிா்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்னை எடுக்கப்பட்டு, பேரவை உரிமைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக எம்எல்ஏக்களும் தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கடந்த 2017-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது.

பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதியும், நோட்டீஸை ரத்து செய்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை உரிமைக்குழு மற்றும் பேரவை செயலா் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் திமுக தலைவா் ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக எம்எல்ஏக்களும், பாஜகவில் இணைந்த கு.க.செல்வமும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் சிலம்பண்ணன், ரவீந்திரன் ஆகியோா் ஆஜராகி, ‘இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க வேண்டுமென வலியுறுத்த விரும்பவில்லை’ எனத் தெரிவித்தனா். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிமைக் குழு நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT