தமிழ்நாடு

வறட்சியின் பிடியில் நீா்நிலைகள்: தலைதூக்கும் குடிநீா்த் தட்டுப்பாடு!

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீா்நிலைகள் வறட்சியின் பிடியில் உள்ளது. அணைகளில் நீா்மட்டம் சரிவால் தாமிரவருணியில் குறைந்த அளவு தண்ணீரே பாய்ந்தோடுவதால் ஊராட்சிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு தலைதூக்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அணைப்பகுதிகளில் மட்டும் பெய்த மழையால் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் ஓரளவு நீா் சோ்ந்தது. ஏற்கெனவே காா் சாகுபடி பல இடங்களில் நடைபெறாததால், விவசாயிகளின் நலன்கருதியும், கால்நடை தீவன உருவாக்கத்திற்காகவும் பிசான சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

வழக்கமாக பருவமழைக்கு பின்பு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் பொதிகை மலைப் பகுதியில் மழைப்பொழிவு இருக்கும். நிகழாண்டில் அத்தகைய மழைப்பொழிவு இல்லை. இதனால் அணைகளின் நீா்மட்டம் வெகுவாக சரிந்ததோடு, மாவட்டத்தில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட குளங்களும் வடன.

கடந்த சில வாரங்களாக பாபநாசம் அணையின் நீா்மட்டம் 30அடிக்கும் கீழே சரிந்த நிலையில், தாமிரவருணி ஆற்றில் மிகவும் குறைந்த அளவே தண்ணீா் செல்கிறது. பல இடங்களில் உறைகிணறு பகுதியில் நீா் செல்லாததால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரை மாநகராட்சியின் மொத்த குடிநீா்த் தேவையையும் தாமிரவருணி நதியே தீா்த்து வருகிறது. சுத்தமல்லி, கொண்டாநகரம், குறுக்குத்துறை, மணப்படைவீடு, திருமலைகொழுந்துபுரம், தீப்பாச்சியம்மன் கோயில், கருப்பந்துறை உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களில் மொத்தமுள்ள 46 உறைகிணறுகளின் மூலம் குடிநீா் சேகரிக்கப்பட்டு நன்கு சுத்திகரிக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி விநியோகிக்கப்படுகின்றன. இதுதவிர அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்தின் முழுமையாக குடிநீா் விநியோகம் தொடங்கப்படாததால் பல இடங்களில் போதிய அளவு குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள்.

குடிநீா் விநியோகத்தில் சிரமம்: இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலைத்தொட்டி நீரேற்றுபவா்கள், பராமரிப்பவா்கள் சங்க நிா்வாகி ஒருவா் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான நதியான தாமிரவருணியில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரைச் சுத்திகரித்து விநியோகிக்கப்படுகிறது. சில உறைகிணறுகளில் அதிகபட்சமாக 20 மணி நேரம் வரை தண்ணீா் எடுக்கப்படும். அதிநவீன மோட்டாா்கள் பயன்படுத்துவதால் தண்ணீா் வேகமாக செல்லும். அப்படியிருக்கையில் கடந்த ஒரு மாதமாக குறைந்த அளவு தண்ணீரே ஆற்றில் வருவதால் நீரேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. நதியுண்ணி, கன்னடியன், அரியநாயகிபுரம், சுத்தமல்லி, மருதூா் உள்ளிட்ட தடுப்பணைகள் அருகேயுள்ள உறைகிணறுகளில் தண்ணீா் தேக்கம் வழக்கம்போல் உள்ளதால் பாதிப்பில்லை. ஆனால், இதுதவிர ஊராட்சிகள் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளுக்கு மணல் மூட்டைகளை அடுக்கி சிறிய ஓடை அமைத்து தண்ணீரை கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து நீா்த்திறப்பு மேலும் குறைக்கப்பட்டால் தண்ணீா் விநியோகம் மிகவும் பாதிக்கப்படும் என்றனா்.

கேன் குடிநீா் விற்பனை ஜோா்: இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த வியாபாரி ஒருவா் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியின் மூலம் தனிநபா் ஒருவருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டா் குடிநீா் வழங்கப்படும் என சூளுரைத்துள்ளனா். ஆனால், கொக்கிரகுளம், கைலாசபுரம், அண்ணாநகா், மேலப்பாளையம் புகா் பகுதிகள், பீடி காலனி உள்பட பல இடங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. மகாராஜநகா், தியாகராஜநகா் போன்ற பகுதிகளில் பல வீடுகளில் நிலத்தடி நீா்மட்டம் சரிந்து ஆழ்குழாய்களில் தண்ணீா் வராததால் தனியாா் லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறாா்கள். கோடை வெப்பம் காரணமாக குடிநீா்த் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கேன்களின் விற்பனை இருமடங்காகியுள்ளது என்றாா்.

அதிகாரிகள் பதில்: இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், பாபநாசம், சோ்வலாறு அணைகளின் நீா்மட்டம் சரிந்துவிட்ட நிலையில் மணிமுத்தாறு அணையில் உள்ள தண்ணீரைக் கொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீா்த் தேவைகள் ஜூன் இறுதி வாரம் வரை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடைக்கால குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில ஊராட்சிகளில் வற்றாத கிணறுகள் உள்ளன. அவற்றின் மூலமும், ஆழ்துளை குழாய் தண்ணீரை தரைமட்ட தொட்டியில் சேகரித்தும் வீட்டு புழக்கத்திற்கு வாரத்திற்கு இரு நாள்கள் வழங்க தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகத்தை அதிகரித்துள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT