தமிழ்நாடு

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிக்கொம்பன்? பொதுமக்கள் அச்சம்

5th Jun 2023 12:15 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தை அலறவிட்ட அரிக்கொம்பன் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தைக் கலக்குமா என்கிற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தேனி மாவட்டத்திற்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி மற்றும் அதையொட்டிய கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிக்கொம்பன் என்றழைக்கப்படும் யானை திங்கள்கிழமை அதிகாலை நேரத்தில் வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட அரிக்கொம்பன் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட வனப்பகுதியில் விடுவதற்காகக் கொண்டு செல்வதாக தகவல் வெளியானது. 

தகவல் அறிந்ததும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள், பாபநாசம் காணிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அரிக்கொம்பனை பிடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பார்வையிட வந்த அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வெள்ளிமலைப் பகுதியில் யானையை விட அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவதற்கு முடிவு செய்து அங்கு கொண்டு செல்வதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், காரையாறு காணிக் குடியிருப்பு மக்கள் மற்றும் அடிவார கிராம மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே வனத்துறை மாற்று வழியைப் பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாபநாசம் வனப்பகுதிக்கு அரிக்கொம்பன் யானை கொண்டு செல்லப்படுவது உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT

Tags : Arikomban
ADVERTISEMENT
ADVERTISEMENT