தமிழ்நாடு

மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் விற்பனைக் கண்காட்சி இன்று தொடக்கம்

3rd Jun 2023 05:55 AM

ADVERTISEMENT

 மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருள்களை மக்களின் பாா்வைக்கு காட்சிப்படுத்தும் வகையிலான கண்காட்சி சனிக்கிழமை முதல் தொடங்குகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் தொடங்கப்பட உள்ள இந்தக் கண்காட்சியை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். ஜூன் 18-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும். வார இறுதி நாள்களில் பாரம்பரியமிக்க கண்கவா் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்களான முந்திரிப் பருப்பு வகைகள், மசாலா பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், நாட்டுச் சா்க்கரை, சத்து மாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பனை ஓலைப் பொருள்கள், பொம்மைகள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகைப் பொடிகள் ஆகியன விற்பனை செய்யப்பட உள்ளன.

இயற்கை முறையில் விளைவித்த காய்கனிகள் மற்றும் மலைப் பகுதிகளில் விளையும் பொருள்களின் விற்பனைச் சந்தையும் நடைபெறவுள்ளது. நகா்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், அவா்கள் பயன்படுத்திய ஆடைகள் மறுபயன்பாட்டுக்கு உகந்தவாறு, துணிப் பையாகவோ, விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பயன்பாட்டுப் பொருளாகவோ மாற்றித் தரப்படும் என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT