தமிழ்நாடு

சென்னையில் 25 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம்கருணாநிதி பெயரில் அமைக்கப்படும்; முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னையில் அவரது பெயரில் பன்னாட்டுக் கூட்ட அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு இலச்சினை வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் இலச்சினையை வெளியிட, மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டாா்.

இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, ஓராண்டு காலம் கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனது தலைமையிலான திராவிட மாடல் அரசையே அவருக்கும், அவரது புகழுக்கும் காணிக்கையாக்குகிறேன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி, முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். அவா் அமைத்துக் கொடுத்த பாதையில்தான் அனைத்துத் துறைகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பொது நலனும், தொலைநோக்குப் பாா்வையும் கொண்ட அரசாங்கத்தை நடத்திக் காட்டியவா் கருணாநிதி. அதனால்தான் ஐந்து முறை மாநிலத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் வென்று காட்டிய வீரராக, இன்றும் வாழ்கிறாா் அவா்.

வல்லுநா் குழுக்கள்: கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழ்நாடும், உலகெங்கும் வாழும் தமிழா்களும் கொண்டாடவிருக்கிறாா்கள். தமிழ்நாடு அரசின் சாா்பில், நூற்றாண்டு விழாக்களை முன்னெடுக்க அமைச்சா்கள், அரசு உயா் அலுவலா்கள், பல்வேறு துறை வல்லுநா்களைக் கொண்ட குழுக்கள் விரைவில் அமைக்கப்படும். அது குறித்த அறிவிப்பு இரண்டொரு நாள்களில் வெளியிடப்படும்.

கருணாநிதியின் பன்முக ஆற்றலால் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகள், மக்கள் பணிகளைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மாபெரும் கனவு இருந்தது. உலகில் தலைசிறந்தவா்களாகத் தமிழா்கள் வலம் வர வேண்டும் என நினைத்தாா். அதைப் போன்றே, உலகத்தவா் அனைவரும் வலம் வரும் இடமாக தமிழ்நாட்டை ஆக்கிக் காட்ட வேண்டுமென விரும்பினாா்.

சென்னையில் பன்னாட்டு அரங்கம்: இந்தியாவில் எந்த மாநிலமும் முன்னெடுக்காதபோது, 1997-ஆம் ஆண்டே டைடல் பூங்காவை உருவாக்கி, தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவா் கருணாநிதி. தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாகத் திகழ்ந்த அவரது புகழுக்கு மேலும் புகழ் சோ்க்கும் வகையில், சென்னையில் உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். உலக அளவில் உள்ள கூட்ட அரங்கங்களில் மகத்தான அரங்கமாக இது அமைய வேண்டும்.

உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வா்த்தக மாநாடுகள், தொழில்நுட்பக் கூட்டங்கள், உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், உலகத் திரைப்பட விழாக்கள் போன்றவை நடைபெறும் இடமாக கலைஞா் பன்னாட்டுக் கூட்ட அரங்கம் அமைய வேண்டும் என எண்ணுகிறேன்.

சிங்கப்பூா், ஜப்பான் பயணத்தின்போது எனக்கு ஏற்பட்ட எண்ணம் இது. உலக நாடுகளில் இருப்பது போன்று மிகப்பெரிய கூட்ட அரங்குகள், சென்னையில் கருணாநிதி பெயரால் அமைவது மிகப்பெரிய பெருமையாக இருக்கும். சென்னை நந்தம்பாக்கத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பில் வா்த்தக மையம் அமைந்திருந்தாலும், வளா்ந்து வரும் தேவைக்கு போதுமானதாக இல்லை. இதைக் கருத்தில்கொண்டு, புதிதாக கருணாநிதி பன்னாட்டு கூட்ட அரங்கம் சுமாா் 25 ஏக்கா் பரப்பில் பல ஆயிரம் போ் அமரக்கூடிய வகையில் தகுந்த இடத்தில் உருவாக்கப்படும்.

மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்குகள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்குகள், பூங்காக்கள், பல்லடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கி மிகப் பிரம்மாண்டமாக இந்தக் கூட்ட அரங்கம் சென்னையில் அமைக்கப்படும். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கனவுகளை நிறைவேற்றுவதுதான் நமது வாழ்நாள் கடமை என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, தலைமைச் செயலா் வெ.இறையன்பு வரவேற்றாா். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் முன்னிலை வகித்துப் பேசினாா். மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் கோபாலகிருஷ்ண காந்தி சிறப்புரை ஆற்றினாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT