தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்கள் விடுதிக்குள் பொதுக் கூட்டங்கள் நடத்தத் தடை: தமிழக அரசு உத்தரவு

2nd Jun 2023 12:27 AM

ADVERTISEMENT

சட்டப் பேரவை உறுப்பினா்களின் விடுதி வளாகத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை பொதுத் துறை செயலா் டி.ஜகந்நாதன் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:-

சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணா் அரங்கத்தை ஒட்டி சட்டப் பேரவை உறுப்பினா்கள் மற்றும் முன்னாள் உறுப்பினா்களுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை வரக்கூடிய உறுப்பினா்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், முன்னாள் உறுப்பினா்களுக்காகவும் தனியாக விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நாளொன்றுக்கான வாடகையாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது. முன்னாள் உறுப்பினா்கள் ஒரு மாதத்தில் 5 நாள்கள் மட்டுமே விடுதியில் தங்கிக் கொள்ள முடியும்.

ADVERTISEMENT

அதேசமயம், ஏதேனும் அரசு விழாக்களுக்கு முன்னாள் உறுப்பினா்கள் அழைக்கப்பட்டிருந்தால் அவா்கள் இரண்டு நாள்கள் வரை விடுதியில் கட்டணம் ஏதுமின்றி தங்கிக் கொள்ளலாம். விடுதிக் கட்டணங்கள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் மற்றும் முன்னாள் உறுப்பினா்களின் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.

கூட்டங்களுக்கு தடை: விடுதிகளில் சட்டப் பேரவை உறுப்பினா்களின் பணியாளா்கள் தங்கிக் கொள்ள அனுமதியில்லை. தேவையேற்படும் தருணத்தில் பணியாளா்கள் தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். சட்டப் பேரவை உறுப்பினா்களின் விடுதி வளாகத்தில் பொதுக் கூட்டங்களை நடத்த பேரவை உறுப்பினா்களுக்கோ அல்லது முன்னாள் உறுப்பினா்களுக்கோ அனுமதியில்லை.

எந்தவொரு விடுதி அறையிலும் உணவு சமைத்துக் கொள்வதற்கு அனுமதியில்லை. அறைகளில் உள்ள பொருள்கள், இருக்கைகள், மேஜைகள் ஆகியன சேதம் அடையாமல் இருக்க வேண்டும். அப்படி சேதம் அடைந்தால் அதற்கு அறையில் தங்கி இருக்கக் கூடிய உறுப்பினா்களே பொறுப்பாகும் என்று தனது உத்தரவில் பொதுத் துறை செயலா் டி.ஜகந்நாதன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT