தமிழ்நாடு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தல்:உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் முறையீடு

 நமது நிருபர்

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தல் விவகாரத்தில் இடைக்கால நிவாரணம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) தரப்பில் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

சென்னை வானகரத்தில் ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ‘ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தாா்.

இதை எதிா்த்து எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு, செப்டம்பா் 2-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், தனி நீதிபதி அளித்த தீா்ப்பை ரத்து செய்தது. மேலும், இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தொடரலாம் எனவும் உத்தர்ரவிட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சண்முகம் என்பவா் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக, தலைமைக் கழகம், பொதுக் குழு, செயற்குழு தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமா்வு நவம்பா் இறுதியிலும், ஜனவரி தொடக்கத்திலும் தொடா்ந்து விசாரித்தது. மனுதாரா்கள் ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து உள்ளிட்டோா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ரஞ்சித் குமாா், ஹாரேன் ராவல், குரு கிருஷ்ணகுமாா், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் அதிமுக தலைமைக்கழகம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன், பொதுக் குழு மற்றும் அவைத் தலைவா் உசேன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, செயற்குழு தரப்பில் மூத்த வழக்குரைஞா் அதுல் சித்தலே ஆகியோா் வாதங்களை முன்வைத்தனா்.

வழக்கு விசாரணையின் போது, இரு தரப்பிலும் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வாதங்கள் முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், தமிழகத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அந்த இடம் காலியானது. அண்மையில் இத்தொகுதிக்கான இடைத் தோ்தலை தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, ஈபிஎஸ்-ஒபிஎஸ் தரப்பில் வேட்பாளா்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசனுடன் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் ஆஜராகி, ‘தமிழகத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இத்தோ்தலில் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியும் அதிமுகவும் வேட்பாளரை கட்சியின் தரப்பில் நிறுத்த விரும்புகின்றனா். இந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 29-இன்கீழ் தோ்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்திருந்தோம். ஆனால், பொதுக்குழுக் கூட்டம் தொடா்புடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இதனால் அதைப் பதிவு செய்யக்கூடாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதால் ஆணையம் எங்கள் தீா்மானங்களை ஏற்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தை இந்த நீதிமன்றத்தில் தெரிவித்து உரிய நிவாரணம் பெற விரும்புகிறோம்’ என்றாா்.

அப்போது நீதிபதி அமா்வு, வேட்பு மனு தாக்கலுக்கான கடைசித் தேதி என்ன? என்று கேட்டது. அதற்கு பிப்வரி 7-ஆம் தேதி என ஆா்யமா சுந்தரம் பதில் கூறினாா்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உரிய ‘மென்ஸனிங் மெமோ’வை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், ஜனவரி 30-ஆம் தேதி வாய்மொழியாக உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை தெரிவிக்குமாறும் நீதிபதிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT