தமிழ்நாடு

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

17th Jan 2023 10:10 AM

ADVERTISEMENT


காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் திரளான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்க முறையை நீண்ட காலமாக பூஜைகளுக்கு பயன்படுத்தி வருவதால், இந்த பஞ்சாங்க குறிப்பின்படி நிகழாண்டு டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதிய பஞ்சாங்கம் வெளியான பின்னர் சனிப்பெயர்ச்சிக்கான நாள், நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.4 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி ஆகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளதால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மூலவர் தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாள், ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் ஏராளமானோர் அதிகாலை முதல் வரத் தொடங்கியுள்ளனர். 

ADVERTISEMENT

கட்டணமில்லா தரிசன வரிசையில் திரளான பக்தர்கள் கோயிலுக்குள் செல்கின்றனர். கட்டண வரிசைகளில் பக்தர்கள் சொற்பமாகவே காணப்படுகின்றனர்.

வழக்கமாக சனிக்கிழமையில் எந்தவிதமான கூட்டம் இருக்குமோ அதே நிலையில்தான் காணப்படுகிறது. 

இதையும் படிக்க | இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி! - சீதாராம் யெச்சூரி சிறப்பு நேர்காணல்

சனிப்பெயர்ச்சிக்கான எந்தவொரு சிறப்பு வழிபாடுகளும், ஏற்பாடுகளும் இக்கோயிலில் செய்யப்படவில்லை.

வழக்கமாக சுவாமிகளுக்கு நடைபெறும் அர்ச்சனை, ஆராதனைகள் மட்டுமே இந்நாளிலும் நடைபெறுகிறது.

எனினும் திருக்கணித பஞ்சாங்கத்தை கடைப்பிடிப்போர் பல ஊர்களில் இருந்தும் கணிசமாக திருநள்ளாறுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி என்றால் புதுச்சேரி அரசு சார்பிலும், கோயில் நிர்வாகம் சார்பிலும் பல மாதங்களுக்கு முன்பே பல முன்னேற்பாடுகள் செய்யப்படும். நளன் தீர்த்தக் குளத்திலும், கோயிலிலும் லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு காணப்படுவர். கோயிலில் தங்க காக வாகனத்தில் உற்சவரான ஸ்ரீ சனீஸ்வரபகவான் எழுந்தருளச் செய்யப்படுவார். மூலவரான ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து குறிப்பிட்ட நேரத்தில் சனிப்பெயர்ச்சியை குறிக்கும் வகையில் சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT