தமிழ்நாடு

அண்ணா பல்கலையில் குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி: அன்புமணி இராமதாஸ் 

DIN


 
அண்ணா பல்கலையில் இனி குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி. பணி நிலைப்பு வேண்டும், நீக்கம் கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் இனி தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. உண்மையில் இத்தகைய அறிவிப்பு மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஆனால், இத்தகைய அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருப்பதன் நோக்கம் பெரும் கவலையை அளிக்கிறது. இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகம் இனி தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நியமிக்காது என்று அறிவித்திருப்பதன் நோக்கம், இனி அனைத்து பணிகளிலும் நிரந்தரப் பணியாளர்கள் தான் நியமிக்கப் படுவார்கள் என்பதாக இருந்திருந்தால் அது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், படித்து விட்டு வேலையின்றி வாடும் இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதாகவும் இருந்திருக்கும். ஆனால், அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு அறிவித்திருப்பதன் நோக்கம், தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நேரடியாக நியமிப்பதை நிறுத்தி விட்டு, அவர்களை விட குறைந்த ஊதியத்தில், எந்த காலத்திலும் பணி நிலைப்பு  உரிமை கோர முடியாத வகையில், குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது தான்.
இதையும் படிக்க.. காதலர் தினம் 'மாடு அணைப்பு நாளா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்கள், டீன்கள், இயக்குனர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உதவி எழுத்தர்,  கணினி இயக்குபவர், அலுவலக உதவியாளர், பியூன் உள்ளிட்ட பணிகளுக்கு இனி தினக்கூலி/தற்காலிக அடிப்படையில் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள்; மாறாக அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் மட்டுமே நியமிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். 

தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் ஊழியர்களை பெறுவது குறித்த நடைமுறைகள் அடுத்த ஒரு மாதத்தில் இறுதி செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மிகவும் தவறானது.

இதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், குத்தகை முறையில் ஊழியர்களை நியமனம் செய்வது குறித்த நடைமுறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு இப்போது பணியில் இருக்கும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தான். இதை அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதி செய்திருக்கின்றனர்.  இது உண்மையாக இருந்தால் 400-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் வேலை இழப்பார்கள்.

அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய முறையாகும். இந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவார்கள்.  தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டால் அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. அத்தகைய பொறுப்பு கொண்ட அரசாங்கமே, அதை மறந்து விட்டு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங் என்ற பெயரில் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கக்கூடாது.

தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும், பிற அரசுத்துறை அலுவலகங்களிலும்  அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை பணி நியமன முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நீக்கும் முடிவை கைவிட வேண்டும்; அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT