தமிழ்நாடு

பெங்களூருவில் திருடிய இருசக்கர வாகனத்தை  ஆம்பூர் வரை துரத்திப் பிடித்த உரிமையாளர்!

8th Feb 2023 06:52 PM

ADVERTISEMENT

பெங்களூருவில் இருசக்கர வாகனத்தை திருடிய  கொள்ளையர்களை ஆம்பூர் வரை துரத்திப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபெருமாள், பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஜெய பெருமாள் நேற்றிரவு தனது இரு சக்கர வாகனத்தை அவரது நண்பர்கள் தங்கி உள்ள வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு உறங்க சென்ற நிலையில், இன்று அதிகாலை ஜெயபெருமாளின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

இருசக்கர வாகனத்தில் பொருத்திருந்த ஜிபிஎஸ் கருவிலிருந்து ஜெயபெருமாள் செல்போனில் குறுஞ்செய்தி வந்ததை தொடர்ந்து, விழித்துக் கொண்ட ஜெயபெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனம் செல்லும் பாதையை காரில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது ஜெயபெருமாளின் இரு சக்கர வாகனம் நீண்ட நேரமாக ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள காட்டுக் கொள்ளை என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஜிபிஎஸ் இல் காண்பித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த நண்பர்களின் உதவியுடன் காட்டுக் கொள்ளை பகுதிக்கு விரைந்த ஜெயபெருமாள், அங்கு இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த கொள்ளையர்களை பிடித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை பெங்களூருவில் இருந்து கொள்ளை அடித்து வந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், அஜய், சக்திவேல், விஷ்வா, கணேஷ் ஆகிய ஐந்து பேரை  காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியாவுக்கு விரைவில் வழங்குவோம்: ரஷிய தூதர் அலிபோவ் 

திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை உரிமையாளரே ஜிபிஎஸ் வசதியுடன் பின்தொடர்ந்து வந்து, கண்டறிந்து கொள்ளையர்களை காவல் துறையினிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT