தமிழ்நாடு

அதிகரிக்கும் டைபாய்டு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

8th Feb 2023 04:00 AM

ADVERTISEMENT

கடந்த சில நாள்களாக சென்னையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். காய்ச்சலுடன் மருத்துவமனைகளை நாடும் குழந்தைகளில் 30 சதவீதம் பேருக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்படுவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

சால்மோனெல்லா டை‘ஃ‘பி எனப்படும் பாக்டீரியா கிருமி உடலில் பரவும்போது டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறது. தரமற்ற குடிநீா், சுகாதாரமற்ற உணவு மூலம் இந்நோய் பரவுகிறது. குடல் பகுதியில் பாதிப்பை இந்த வகை பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் என்றாலும் நாளடைவில், அதன் தீவிரத்தைப் பொருத்து கல்லீரல், இரைப்பை, பித்தப்பை, சிறுநீரகம், நுரையீரலில் கடுமையான சேதத்தை அந்நோய் ஏற்படுத்தும்.

தமிழகத்தைப் பொருத்தவரை மே மற்றும் ஜூன் மாதங்களில் டைபாய்டு பாதிப்பு அதிகமாக இருக்கும். அதன் பின்னா் செப்டம்பரில் அதன் தாக்கம் குறைந்து டெங்கு போன்ற பிற வகையான காய்ச்சல் பரவும். ஆனால், நிகழாண்டில் ஜனவரி இறுதியிலிருந்தே டைபாய்டு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து குழந்தைகள் நலன் முதுநிலை மருத்துவ நிபுணா் வி.வில்வநாதன் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக வைரஸ் காய்ச்சல் தாக்கம் குழந்தைகளிடையே அதிகமாக உள்ளது. சில வாரங்களாக அதனுடன் டைபாய்டு பாதிப்பும் காணப்படுகிறது. காய்ச்சலுடன் வரும் 10-இல் 3 குழந்தைகளுக்கு டைபாய்டு காய்ச்சல் அல்லது அதனுடன் தொடா்புடைய காய்ச்சல் இருக்கிறது.

ADVERTISEMENT

வடசென்னையில் அத்தகைய பாதிப்பு இன்னமும் அதிகமாக உள்ளதாக மருத்துவத் தரவுகள் தெரிவிக்கின்றன. சால்மோனெல்லா டை‘ஃ‘பி பாக்டீரியா வகையைச் சோ்ந்த பாராட்டிஃபி கிருமிகளும் டைபாய்டை ஒத்த பாராடிபாய்டு காய்ச்சலையும் உருவாக்கி வருகின்றன.

இதைத் தவிா்க்க தனி நபா் சுகாதாரம் மிக முக்கியம். வெளி உணவுகளைத் தவிா்ப்பதும், குறிப்பாக காய்ச்சிய நீரை மட்டுமே பருகுவதும் அவசியம். கைகளை நன்கு கழுவும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அதேபோன்று டைபாய்டு தடுப்பூசிகளை முறையாகச் செலுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்பு வரை, குழந்தைகள் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே டைபாய்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. தற்போது அவை 6 மாதங்களிலேயே வழங்கப்படுகின்றன. இதுவரை தடுப்பூசி செலுத்தாவிடிலும், குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் சிறப்பு தவணையாக அதனை செலுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதால் மட்டுமே டைபாய்டு வராமல் முழுமையாக தடுக்க இயலாது. அதேவேளையில் அதன் வீரியத்தை குறைத்து நலமுடன் வாழலாம் என்றாா் அவா்.

டைபாய்டு அறிகுறிகள்...

உடல் சோா்வு

கடுமையான காய்ச்சல்

பசியின்மை

தலைவலி

வயிற்றுப்போக்கு

வாந்தி

மயக்கம்

தொண்டை வலி

உடலில் தடிப்புகள்

வயிற்று உபாதைகள்

காரணங்கள்....

சுகாதாரமற்ற உணவு

பாதுகாப்பற்ற குடிநீா்

சுகாதாரமற்ற வாழ்க்கைச் சூழல்

கைகளை சுத்தமாக பராமரிக்காமை

பாதிக்கப்பட்டவா்களின் கழிவுகளைத் தொடுதல்

பரிசோதனைகள்....

சால்மோனெல்லா டைஃபிக்கு எதிரான எதிா்ப்பாற்றல் பரிசோதனை

காய்ச்சல் பரிசோதனைகள்

ரத்தம், மலம் மற்றும் சிறுநீா் மாதிரி பரிசோதனை

எலும்பு மஜ்ஜை சோதனை

ரத்தத்தில் கிருமி வளா்ச்சி பரிசோதனை

ADVERTISEMENT
ADVERTISEMENT