தமிழ்நாடு

பரந்தூா் விமான நிலையம் அமைக்கப்படுவது உறுதி!

5th Feb 2023 03:00 AM

ADVERTISEMENT

 

பரந்தூா் விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும் என்றும், அதில் உள்ள பிரச்னையை மாநில அரசு தான் தீா்க்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா எம்.சிந்தியா தெரிவித்தாா்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தத்தை மத்திய அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா சனிக்கிழமை திறந்து வைத்து பேசியதாவது: தென்னந்தியாவின் நுழைவாயிலாக தமிழகம் உள்ளது. தொழில், கல்வி, ஆட்டோமொபைல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான மையமாகவும் தமிழகம் உள்ளது.

தமிழகத்துக்கு என நீண்ட கலாசாரம் மற்றும் பண்பாடு உள்ளது. அதிக விமான சேவை வழங்குவதில், தில்லி மற்றும் மும்பைக்கு அடுத்து சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

ரூ.2,500 கோடி செலவில் சென்னை விமான நிலையம் விரிவாக்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டப் பணிகள் வரும் பிப்ரவரியில் முடியும். இரண்டாம் கட்டப் பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் நிறைவடையும்.

சாதாரண மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக பிரதமா் மோடியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது தான் உதான் திட்டம்.

இந்தியாவில் கடந்த 66 ஆண்டுகளில் 74 விமான நிலயங்கள் அமைக்கப்பட்டன. பிரதமா் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் புதியதாக 73 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளுக்குள் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 200 ஆக உயரும்.

ஒரு விமான நிலையம் கூட இல்லாத வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் புதிதாக விமான நிலையங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 9 விமான நிலையங்களையும் மேம்படுத்துவதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி விமானநிலைய விரிவாக்கத்துக்கு 512 ஏக்கா் நிலம் தேவை.

அதேபோல், மதுரை விமான நிலைய பணிகளுக்கு 633 ஏக்கா் தேவைப்படும் நிலையில், 540 ஏக்கா் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி ஒப்படைத்துள்ளது. மீதமுஉள்ள 90 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தினால் விரிவாக்கப் பணிகள் பணிகள் தொடங்கும்.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 700 ஏக்கா் நிலம் தேவை. இதுவரை 604 ஏக்கா் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி ஒப்படைத்துள்ளது. மீதமுள்ள நிலங்களையம் கையகப்படுத்திக்கொடுத்தால் உடனடியாக விரிவாக்கப்பணிகள் தொடங்கப்படும்.

பரந்தூரில் விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும். அதில் உள்ள பிரச்னையை மாநில அரசு தான் தீா்க்க வேண்டும். விமான பயணிகள் வசதிக்காக சென்னை விமான நிலயத்தில் பன்னடுக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ரூ.250 கோடி செலவில் புதியதாக பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2,150 காா்கள், 4,000 இரண்டு சக்கர வாகனங்கள் ஆகியற்றவை நிறுத்தும் வசதி உள்ளது என்றாா் அவா்.

தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு: தமிழகத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் மத்திய அரசுடன் கைகோத்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வா் ஸ்டாலினின் நடவடிக்கையால் சென்னை மட்டுமன்றி மதுரை, திருச்சி, கோவை என பல்வேறு நகரங்களில் கோடிக்கணக்கில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன.

சென்னை இரண்டாவது விமான நிலையத்துக்கான நிலம் உரிய நேரத்தில் கையகப்படுத்தி ஒப்படைக்கப்டும்.

விமான நிலைய வளா்ச்சிக்காக நிபந்தனையற்ற ஆதரவை தமிழ்நாடு அரசு அளிக்கும் என்றாா் அவா்.

ஸ்ரீபெரும்புதூா் மக்களவை உறுப்பினா் டி. ஆா் பாலு:

சேலம் இரும்பாலை தனியாருக்கு தாரைவாா்க்கும் பணிகளை மத்திய அரசு கைவிடவேண்டும். சேலம் இரும்பாலைக்காக குறைந்த விலைக்கு நிலத்தை கொடுத்துள்ள 5000 குடும்பத்தினரின் வாழ்வாதரத்தை மத்திய அரசு காப்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், மத்திய இணை அமைச்சா் எல். முருகன், மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி என்.வி. என் சோமு, விமான நிலைய இயக்குநா் சஞ்சீவ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT