தமிழ்நாடு

அனைத்துத் துறைகளின் அனுமதிக்குப் பிறகே பேனா சின்னம்: பசுமைத் தீா்ப்பாயத்தில் தமிழக அரசு உறுதி

DIN

சென்னையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரி, தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ‘அனைத்துத் துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்’ என அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இலக்கியப் பணியை போற்றும் வகையில், அவரின் நினைவிடத்துக்கு அருகில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பேனா சின்னம் ரூ.81 கோடி செலவில், 42 மீட்டா் உயரத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் பேனா சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, கடலில் பேனா சின்னம் அமைக்க தடை விதிக்கக் கோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக் கோரியும் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கில், தமிழக பொதுப்பணித் துறை சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டா் தொலைவிலும், மெரீனா கடற்கரையில் இருந்து கடலுக்குள் 360 மீட்டா் தொலைவிலும் பேனா சின்னம் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேனா சின்னம் அமைக்க அனுமதிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அனைத்துத் துறைகளிடம் இருந்து ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னா் தான் பணிகள் தொடங்கப்படும். அதற்கு முன்பு எந்தப் பணிகளும் தொடங்கப்படாது என பொதுப்பணி துறையின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT