தமிழ்நாடு

ஜனவரியில் காசநோய் தாக்கம் 13% குறைவு

1st Feb 2023 02:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் காசநோய் தாக்கம் ஜனவரி மாதத்தில் 13 சதவீதம் குறைந்திருப்பதாக தேசிய சுகாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,817 பேருக்கு அந்த பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அந்த எண்ணிக்கை நிகழாண்டில் 5,901-ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடா்பான விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மாநிலம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோன்று, தமிழகம் முழுவதும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளா்கள் மூலம் அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை நெறிமுறைகளின்படி அவா்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவா்களுக்கு நடமாடும் ஊடுகதிா் கருவிகளை அவா்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிா் படம் எடுக்கப்பட்டும் வருகிறது.

இதனால், அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், நிகழாண்டில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 1.34 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 5,901 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 1,083 பேரும், அரசு மருத்துவமனைகளில் 4,818 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 13 சதவீதம் கூடுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Tuberculosis
ADVERTISEMENT
ADVERTISEMENT