தமிழ்நாடு

நவதிருப்பதி கோயில்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

24th Sep 2022 12:02 PM

ADVERTISEMENT

நெல்லை: புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் ஆன்மீக சுற்றுலா சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நவதிருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன 108 திவ்ய தேச ஸ்தலங்களில் இடம்பெற்றுள்ள இத்தகைய திருக்கோயில்கள் திருவைகுண்டம், நத்தம் திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் மற்றும் ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் இத்திருத்தலங்களில் தரிசனம் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா சிறப்புப் பேருந்துகள் இயக்கபடுகிறது.

செப்டம்பர் 24 மற்றும்  அக்டோபர் 1, 8, 15 ஆகிய தினங்களில் நவதிருப்பதி கோயில்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

ADVERTISEMENT

சிறப்பு பேருந்துக்காக  நபர் ஒன்றுக்கு ரூபாய் 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்றது. 

புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காலை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 3 பேருந்துகள் புறப்பட்டன. ஆன்மீகப் பயணம் செல்லும் பக்தா்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் மோகன் குடிநீர் இனிப்பு, காரம், பிஸ்கட் போன்றவைகளை வழங்கினார்.

ஒவ்வொரு பேருந்திலும் ஒரு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முன்னின்று வழிநடத்திச் செல்கின்றனர்.

பக்தர்களுக்கு ஒவ்வொரு கோயிலைப் பற்றிய தல வரலாறு மற்றும் அங்கு அருள் பாலிக்கும் பெருமாளின் பெருமைகளை விளக்குகின்றனர். காலை 7 மணிக்கு கிளம்பிய பேருந்துகள் மாலை 7 மணிக்கு மீண்டும் நெல்லை புதிய பேருந்து நிலையத்தை வந்தடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனா்.  

மேலும் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோயில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில், திருக்குறுங்குடி நம்பி கோயில் மற்றும் அத்தால நல்லூர் பெருமாள் கோயில் ஆகிய இடங்களுக்கும் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வெங்கடாஜலபதி திருக்கோயில் ஆகிய பகுதிக்கும் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்: ரன்னிங் டைம்?

ADVERTISEMENT
ADVERTISEMENT