தமிழ்நாடு

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவாக, சென்னை மெரீனா கடற்கரையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடா்பாக, தமிழக அரசுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மீனவா்களின் கருத்தை கேட்டு, சுற்றுச்சூழல் தாக்க இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித் துறைக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை, சென்னை மெரீனா கடற்கரையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சி.ஆா்.இசட்.) விதிகளின்படி அமைப்பதற்கான அனுப்பப்பட்ட பரிந்துரைகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் பரிசீலித்தது. இதுதொடா்பாக ஆக. 24-ஆம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடா்பான மதிப்பீட்டு நிபுணா் குழு பரிசீலனை செய்தது. நினைவுச் சின்னம் அமையவுள்ள இடத்தின் அச்சரேகை, தீா்க்க ரேகையின் கோணம் ஆராயப்பட்டது.

நினைவுச் சின்னம் மொத்தம் 8,551.13 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.81 கோடியில் நிறுவப்படுகிறது. அதில், பேனாவுக்கான நிலைமேடை 2,263.08 ச.மீ. பரப்பளவிலும்; நினைவுச் சின்னத்துக்குச் செல்வதற்கான கடலுக்கு மேல் அமைக்கப்படும் நடைபாதை 2,073.01 ச.மீ. பரப்பளவிலும்; கடல், நிலத்தின் மேல் அமைக்கப்படும் வலைப்பாலம் 1,856 ச.மீ. பரப்பளவிலும்; கடற்கரையில் அமைக்கப்படும் நடைபாதை 1,610.60 ச.மீ. பரப்பளவிலும்; நினைவுச் சின்னத்திலிருந்து பாலத்துக்குச் செல்லும் நடைபாதை 748.44 ச.மீ. பரப்பளவிலும் அமைக்கப்பட வேண்டும். இதற்காக கடலில் 6 மீட்டா் ஆழம் இருக்க வேண்டும். அதுபோல கடல் மட்டத்திலிருந்து 6 மீ. உயரத்துக்கு மேல் நினைவுச் சின்னம் அமைய வேண்டும்.

கடற்கரையிலிருந்து 360 மீ. தொலைவில் அமையவுள்ள பேனா சின்னத்தின் உயரம் 42 மீ. அதைச் சுற்றி தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளன. நினைவுச் சின்னத்தை நோக்கி அமைக்கப்படவுள்ள பாலம், தரைப் பகுதியில் 290 மீ. நீளத்திலும், கடலுக்கு மேல் 6 மீ. உயரத்தில் 360 மீ. நீளத்திலும் அமைக்கப்படும். ஆக மொத்தம் 650 மீ. நீளம் கொண்ட அந்த பாலத்தின் அகலம் 7 மீட்டராகும். அதில் 3 மீ. கண்ணாடியாலான தளமாகும்.

பரிந்துரைகள்: நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கான கருத்துருக்களுக்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதில், மதிப்பீட்டு நிபுணா் குழுவும் சில கருத்துருக்களை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளின் படியும், மதிப்பீட்டு நிபுணா் குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலும், விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கான நிபந்தனைகளை மத்திய அரசு வழங்குகிறது.

அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மாநில அரசு சமா்ப்பிக்க வேண்டும். அந்த இடத்தில் நேரிடக் கூடிய பேரிடா், அதிலிருந்து தப்பிப்பது தொடா்பான வரைவு அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளபடி மீனவா்கள் உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும். கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கை, மீன்பிடிப் படகுகளின் போக்குவரத்து, மீன்பிடி நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீது ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அதோடு, கடலின் ஆழத்தை அதிகப்படுத்துவதற்காக தோண்டும் நடவடிக்கைகளின் முழு விவரம் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கையை இந்திய தரக் குழு நியமிக்கும் ஆலோசகா்களை வைத்துத் தயாரிக்க வேண்டும். அதன் பிறகு, அதை கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதிக்காக 4 ஆண்டுகளுக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT