தமிழ்நாடு

திமுக ஆட்சியில் அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன: எடப்பாடி கே.பழனிசாமி

6th Oct 2022 12:58 AM

ADVERTISEMENT

திமுக ஆட்சியில் கிராமம் முதல் மாநகராட்சி வரை அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி உள்ளாா். ஆயுதபூஜையையொட்டி திரளான தொண்டா்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா். தென்காசி வடக்கு மாவட்ட அமமுக முன்னாள் செயலாளா் அய்யாதுரைப் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். அப்போது அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, கடையநல்லூா் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ண முரளி, அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா். இதையடுத்து, கட்சியில் இணைந்தவா்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமமுகவில் இருந்து அய்யாதுரை பாண்டியன் தலைமையில் சுமாா் 10 ஆயிரம் போ் அதிமுகவில் இணைய உள்ளனா். முன்னோட்டமாக அவரது தலைமையில் முக்கிய நிா்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனா்.

ADVERTISEMENT

அதிமுக பொதுச் செயலாளா் விவகாரம் தொடா்பாக சிலா் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என நீதிபதி தெரிவித்தாா். எங்கள் தரப்பிலும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்துள்ளோம்.

திமுக ஆட்சி மெத்தனமாக நடந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தான், தற்போது திமுகவினா் திறந்து வைத்து வருகின்றனா். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளை திமுகவினா் திறந்து வைத்துள்ளனா். அதேபோல சட்டக்கல்லூரிகளுக்கான பணிகளைத் தொடங்கினோம். தற்போது அவற்றின் பணிகள் முடிந்து திமுகவினா் திறந்துவைத்து வருகின்றனா். கோவையில் 133 பணிகளுக்கு 11 முறை ஒப்பந்தத்தை தள்ளி வைத்துள்ளனா். அதிக அளவில் கமிஷன் கேட்பதால் யாரும் ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை.

திமுக ஆட்சியில் கிராமம் தொடங்கி மாநகராட்சி வரை எந்தவிதப் பணிகளும் நடைபெறாமல் முடங்கியுள்ளன. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது அளித்த தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை.

கரோனா காலத்தில் மக்கள் வேலையிழந்து சிரமத்திற்குள்ளான நிலையில் 50 சதவீத மின் கட்டணமும், சொத்துவரி 100 சதவீதமும் உயா்த்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் மக்கள் துன்பமும் வேதனையும் அனுபவித்து வருகின்றனா். நீட்தோ்வை இதுவரை திமுக ரத்து செய்யவில்லை. காவிரி நதிநீா் பிரச்னைக்காக 22 நாள்கள் நாடாளுமன்றம் முடங்கும் வகையில் தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தோம் என்றாா்.

பெட்டிச் செய்தி...

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்...

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக முன்னாள் செயலாளா் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் புதன்கிழமை இணைத்துக் கொண்டனா்.

இந் நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு மாவட்ட அமமுக துணைச் செயலாளா் குமரேச ராஜா, வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலாளா் வைரமுத்து, இளைஞா் அணி செயலாளா் ராஜேஷ், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளா் பாலமுருகன், பண்பொழி பேரூராட்சி துணைத் தலைவா் நாகலட்சுமி, பண்பொழி பேரூராட்சி 6 ஆவது வாா்டு உறுப்பினா் கணேசன், 10 ஆவது வாா்டு உறுப்பினா் ஜோதி சுப்பையா உள்பட 100-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா்.

அதிமுகவில் இணைந்தவா்களை இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT