தமிழ்நாடு

வீட்டிலேயே பிரசவம்: மருத்துவர்கள் நேரில் வந்தும் பரிசோதனைக்கு மறுத்ததால் பரபரப்பு!

DIN

சீர்காழி அருகே எருக்கூரில் வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்த தம்பதியை மருத்துவர்கள் நேரில் சென்று பரிசோதனைக்கு அழைத்தும் அவர்கள் வர மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகில் எருக்கூர் மெயின்ரோடு பகுதியில் வசிப்பவர்கள்  ஜான் - பெல்சியா தம்பதினர். இவர்களுக்கு முதல் ஆண் (தற்போது 4 வயது) குழந்தை  அறுவை சிகிச்சை மூலம் மருத்துவமனையில் மருத்துவர்களால் பிரசவிக்கப்பட்டது.

இரண்டாவது குழந்தையை சுகப் பிரசவமாக பெற்றெடுக்க தம்பதியினர் விரும்பியுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் முதல் குழந்தை அறுவை சிகிச்சையில் பிறந்ததால் இரண்டாவது குழந்தையும் அறுவை சிகிச்சைதான் என்று கூறியுள்ளனர்.

அதை விரும்பாத ஜான் தம்பதியினர் இரண்டாவது குழந்தையை சுகப் பிரசவத்தில் மரபு வழி மருத்துவத்தில்  வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவு செய்து அதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி மருந்து, மாத்திரை, ஊசிகள் பயன்படுத்தாமல் சுகப் பிரசவத்தின் வாயிலாக அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

குழந்தை பிறந்து நஞ்சுகொடி ( பிளசன்டா) வருவதற்காக காத்திருந்த நேரத்தில் இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் வட்டார சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களும் அந்த பகுதி செவிலியரும், ரத்தப்போக்கு போன்றவற்றால்  தாய், சேய் நல உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும்  எனக் கூறி 108 ஆம்புலன்ஸ் வைத்து கொண்டு மருத்துவமனைக்கு வர வலியுறுத்திய நிலையில் தம்பதியினர் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் மற்றும் சுகாதாரத் துறை,கொள்ளிடம் காவல்துறையினர், குழந்தை நல மருத்துவர் மருதவாணன் ஆகியோர் ஜான் வீட்டிற்கு சென்று தாய் - சேய் நலம் குறித்தும் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி இடுவதற்கும் சென்றுள்ளனர்.

ஆனால் ஜான் தம்பதியினர் மருத்துவக் குழுவினரை சந்திக்க மறுத்து தங்கள் வீட்டினை உட்புறமாக பூட்டி அவர்களே வெளியிலேயே நிற்க  வைத்துள்ளனர். நீண்ட நேரமாக சுகாதாரத் துறையினர் பேசியும் நாங்கள் மரபு வழி மருத்துவத்தை தொடர விரும்புவதாகவும் ஆங்கில மருத்துவம் தடுப்பூசி எதுவும் வேண்டாம் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த வீடியோ மற்றும் குழந்தையின் தாயும் சுகாதாரத்துறையினரும் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

மருத்துவத்துறை அதிகாரிகள் இது குறித்து  கூறுகையில், 'பெல்சியா கருவுற்றதிலிருந்து எந்த ஒரு தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவில்லை என தற்போது தெரிய வந்தது. பலமுறை மருத்துவமனைக்கு அழைத்தும் வர மறுப்பதாக கூறினார். சுகப் பிரசவமான நிலையில் குழந்தையில் தொப்புள் கொடி விழாததால் பாதிப்பு ஏற்படும்' எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT