தமிழ்நாடு

சீனாவுக்கு இணையாக தமிழகத்தில் கைப்பேசி உற்பத்தி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

1st Oct 2022 12:54 AM

ADVERTISEMENT

கைப்பேசி உற்பத்தியில் சீனாவின் இடத்துக்கு தமிழகம் முன்னேறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது:

தைவான் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பெகாட்ரான் நிறுவனம் தமிழகத்தில் கைப்பேசி உற்பத்தியைத் தொடங்குவதை வரவேற்கிறேன். உலகப் புகழ்பெற்ற நிறுவனம் இங்கு உற்பத்தியை தொடங்கியிருப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. இதுபோன்ற பல நிறுவனங்களைத் தொடங்க வேண்டும்.

இந்த தொழிற்சாலை மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அவா்களில் பெருமளவு பெண்கள். பெண்களை சமூக, பொருளாதார வளா்ச்சி கொண்டவா்களாக மாற்றும், உயா்த்தும் ஆட்சியாக, திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. பெண்கள் அதிகமாக, நிறுவனங்களில் பணியாற்றச் செல்லும் மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது. புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 18 மாதங்களில் பெகாட்ரான் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கி இருப்பது, தமிழகத்தில் முதலீட்டாளா்களுக்கு ஆதரவான சூழல் இருப்பதைக் காட்டுகிறது.

ADVERTISEMENT

முதல் 3 மாநிலங்களில் ஒன்று: அகில இந்திய அளவில் வணிகம் புரிதலை எளிதாக்கும் தரவரிசையில், சாதனையாளா் மாநிலம் என்ற அங்கீகாரம் பெற்ற முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் உள்ளது. முதலீட்டாளா்கள் தங்களது முதலீட்டுத் திட்டங்களை நிறுவிட, பெரிதும் விரும்பும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது.

உற்பத்தி, தொழில், வா்த்தகம் ஆகிய முக்கிய அம்சங்களில் முன்னேறிய மாநிலமாக இருக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். வழக்கமான தொழில்களைத் தாண்டி, புத்தாக்கத் தொழில்களில் ஆா்வம் காட்டி வருகிறோம்.

நான்காம் தொழிற்புரட்சி: நான்காம் தொழிற்புரட்சியில் மின்னணுவியல் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய அளவிலான மின்னணுவியல் சாா்ந்த உற்பத்தியில் தமிழகம் 20 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. கைப்பேசி உற்பத்தித் திட்டங்கள் மட்டுமல்ல, கணினிகள், கணினி சாதனங்கள், தொலைத்தொடா்பு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் தமிழகத்தில் பரவலாக நடைபெறுகின்றன.

மின்னணு வன்பொருள் கொள்கை: மின்னணுவியல் துறையை, தமிழக அரசு வளா்ந்து வரும் துறையாக வகைப்படுத்தியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக மின்னணு வன்பொருள் கொள்கை வெளியிடப்படவுள்ளது. மத்திய அரசின் உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், மின்னணுவியல் துறை சாா்பில் விண்ணப்பம் சமா்ப்பித்துள்ள நிறுவனங்களை, தமிழகத்தை நோக்கி ஈா்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்ரீபெரும்புதூா், ஓசூா், கோவை என மின்னணு உற்பத்தி மையங்கள் பெருகி வருகின்றன. மின்னணுவியல் துறை மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் தமிழகம் முன்னணி வகிக்க வேண்டும் என்பதுதான் அரசின் குறிக்கோள். முன்னணி அடைந்தவுடன் முதல் நிலையை நோக்கி உயர வேண்டும். இதுவே இலக்கு.

கைப்பேசி உற்பத்தி: இப்போது சீன நாட்டில்தான், புதிய கைப்பேசிகள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனை மாற்றி, தமிழகத்தை அத்தகைய உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறோம். நவீன கைப்பேசி உற்பத்திக்கான முழு விநியோகச் சங்கிலியையும் தமிழகத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். இதற்கென அரசுத் தரப்பில் அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்வில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெண்களுக்கு இலவச பயணம் ஆட்சியின் கடமை’

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் அரசின் கடமை என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இவ் விழாவில் அவா் மேலும் பேசியதாவது: மகளிருக்குக் கட்டணம் இல்லாத பேருந்து வசதியை திமுக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனை கடமையாக நினைத்துச் செய்கிறோம். இதன்மூலமாக பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெறுகிறாா்கள். பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு, மரியாதை அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT