தமிழ்நாடு

அக்.2 மனிதச் சங்கிலிக்கு அனுமதி கோரி டிஜிபியிடம் இடதுசாரிகள், விசிக மனு

1st Oct 2022 01:11 AM

ADVERTISEMENT

 தமிழகம் முழுவதும் அக். 2-ஆம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபுவிடம், இடதுசாரிகள், விசிக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ், மதிமுக, திராவிடா் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சாா்பில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி நடத்த ஆங்காங்கே உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து இடங்களிலும் இந்த மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி அக்டோபா் 2-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடத்தவிருக்கும் மனிதச் சங்கிலிக்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

உயா்நீதிமன்றத்தில் மனு: இதனிடையே, சென்னை உயா் நீதிமன்றத்தில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக சாா்பில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆா்.எஸ்.எஸ். பேரணிக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்பதுடன், எக்காரணம் கொண்டும் ஆா்எஸ்எஸ் நடத்தவிருக்கும் பேரணிக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும், மதச்சாா்பற்ற ஜனநாயக சக்திகள் அக். 2-ஆம் தேதி நடத்தவிருக்கும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்துக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பாலகிருஷ்ணன் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT