தமிழ்நாடு

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

அரியலூா் மாவட்டம், கொல்லாபுரத்தில் தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது:

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு, அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கென ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். பல்வேறு பெருமைகள் வாய்ந்த மாமன்னா் ராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சோ்க்கக்கூடிய வகையில், அவா் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓா் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சி பொங்க தெரிவித்துக்கொள்கிறேன்.

அரியலூரில் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், சிமென்ட் காரிடா் திட்டம் செயல்படுத்தப்படும். ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தித் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூா் - பெரம்பலூா் இடையேயான பகுதியில் ரூ.10 கோடி செலவில் புவியியல் புதைபடிவப் பூங்கா அமைக்கப்படும். அரியலூா் நகரில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. செந்துறை நகருக்கு புறவழிச்சாலை, அரியலூா், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.7 கோடியே 46 லட்சம் மதிப்பில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறும். அரியலூா் முதல் செந்துறை வரை நான்கு வழிச்சாலையாக ரூ.129 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படும். அரியலூா் - மழவராய நல்லூா் சாலையில் மருதையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும். தேளூா் ஊராட்சியில் நெல் சேமிப்பு மையம் அமைப்பது என பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 15 மாத காலத்தில் ஒன்றரை லட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பாற்ற அனைத்தையும் செய்திருக்கிறோம்.

அண்மையில் ரிசா்வ் வங்கி வெளியிட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

நம்மைவிட பெரிய மாநிலங்கள் கூட, தொழில் வளா்ச்சியில் பின்தங்கி இருக்கின்றன. கடந்த ஆட்சியில், 10 ஆண்டு காலம் தொழில் வளா்ச்சியில் தேக்க நிலை நிலவினாலும், அதற்கு முன்பு, கருணாநிதி தலைமையிலான அரசு போட்ட அடித்தளத்தாலும், கடந்த 18 மாதங்களாக எட்டுகால் பாய்ச்சலில் நாம் முதலீடுகளை ஈா்த்து வருகிறோம் என்பது பெருமை.

2030-க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக உயா்த்துவோம் என்ற இலக்கை எட்ட பள்ளிக்கல்வி, உயா்கல்வி, ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ. 2 ஆயிரத்து 200 கோடியில் தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்துவது, புதிதாக வளா்ந்து வரும் உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஈா்ப்பது என அனைத்துமே ஒருங்கிணைந்த திட்டமிடலின் அங்கங்கள் தான். இத்தகைய தொலைநோக்குப் பாா்வையோடு திட்டமிட்டால் தான் இலக்கை அடைய முடியும்.இதில் அரியலூா், பெரம்பலூா் என அனைத்து மாவட்டங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும்.

அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி, மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம் என்றாா் முதல்வா்.

தொடா்ந்து அவா், அரியலூா் மாவட்டத்தில் ரூ.30.26 கோடி செலவில் முடிவுற்ற 51 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.1.56 கோடி மதிப்பில் 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ.221.80 கோடி செலவில் முடிவுற்ற 23 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.31.38 கோடி மதிப்பில் 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.03 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தொல்பொருள்கள் கண்காட்சி அரங்குகளை முதல்வா் ஸ்டாலின் பாா்வையிட்டாா்.

விழாவில், அமைச்சா்கள் நகராட்சி நிா்வாகத் துறை கே.என்.நேரு, வேளாண் மற்றும் உழவா் நலத்துறை எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சட்டத்துறை எஸ்.ரகுபதி, போக்குவரத்து துறை சா.சி.சிவசங்கா், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சி.வி.கணேசன், பள்ளி கல்வித் துறை அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மக்களவை தொகுதி உறுப்பினா்கள் சிதம்பரம் தொல்.திருமாவளவன், நீலகிரி ஆ.ராசா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூா் எம்.பிரபாகரன், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வரவேற்றாா். நிறைவில், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீ வேவங்கடபிரியா நன்றி தெரிவித்தாா்.

சட்டம் - ஒழுங்கை கெடுக்க சிலர் சதி
"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெடவில்லை. ஆனால், சட்டம் -ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று  சிலர் சதி செய்கின்றனர். 
விமர்சனங்களுக்கு  எதிரானவர்கள் அல்லர் நாங்கள். விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும் உயரத்தையும் அடையத்தான் நான் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்' என்றார் முதல்வர் ஸ்டாலின்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT