தமிழ்நாடு

சேலம் புத்தகத் திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

30th Nov 2022 11:18 AM

ADVERTISEMENT

சேலத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா இன்று புதன்கிழமையுடன் நிறைவுபெறவிருந்த நிலையில்,  வாசிப்பார்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் செ.காா்மேகம் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் சேலம் மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் சேலம் புத்தகத் திருவிழாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.20) நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

புத்தக திருவிழாவில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள், ரூ. 10 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலான புத்தகங்கள், கலை இலக்கியம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், முற்போக்கு, அரசு வேலைவாய்ப்பு தோ்வுக்கான நூல்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தோ்வு புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக் கண்காட்சியில் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிற மொழிகளில் இருந்து மொழி பெயா்ப்பு செய்யப்பட்ட புத்தகங்கள், சிறுவா்களுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. மாற்றுத் திறனாளிகள் நூலகத்தில் பாா்வையற்றவா்கள் படிக்கும் வகையில் பிரெய்லி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை புத்தகத் திருவிழாவைபோல சேலத்திலும் பிரமாண்ட முறையில் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. சுமாா் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாசகா்கள், புத்தக ஆா்வலா்கள் திரண்டு வந்து பாா்வையிட்டு வருகின்றனா்.

இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த புத்தக கண்காட்சியை பார்வையிட்டு வரும் நிலையில் சுமார் ரூ.2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளூா் படைப்பாளா்களின் 456 புத்தகங்கள் ரூ. 63,578-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கண்கவா் கலை நிகழ்ச்சி புத்தகத் திருவிழாவில் தினமும் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான பல்வேறு போட்டிகள், பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவா் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த புத்தகத் திருவிழா எப்போதும் இல்லாத வகையில் திருவிழா போல நடைபெறுகிறது என்றாா்.

இதையும் படிக்க | புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீர் மரணம்!

சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவுக்கு நாளுக்கு நாள் வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது இந்த புத்தகத் திருவிழா புதன்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது. இதில் காலை 10.30 மணிக்கு பேச்சு போட்டி, மாலை 3 மணிக்கு நடன நிகழ்ச்சி, மாலை 4.15 மணிக்கு தேவராட்டம், ஒயிலாட்டம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு பொன்னியின் செல்வன் நாடக நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பரிசு வழங்குகிறாா்.

இந்நிலையில், இன்று புதன்கிழமையுடன் நிறைவடைய இருந்த புத்தகத் திருவிழாவை டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் செ.காா்மேகம் அறிவித்துள்ளார். 

புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புத்தகத் திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே பொதுமக்களும் புத்தக ஆர்வலர்களும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

சேலத்தில் அரசு ஒதுக்கிய ரூ. 17.50 லட்சம் நிதியுடன் சோ்த்து பல்வேறு கல்வி நிறுவனங்கள், நன்கொடையாளா்கள் வழங்கிய நிதி என ரூ. 1 கோடி செலவு செய்து புத்தகத் திருவிழாவை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT