தமிழ்நாடு

தமிழகம் வந்த பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநரிடம் பாஜக புகார்

29th Nov 2022 03:48 PM

ADVERTISEMENT


செஸ் ஒலிம்பியாட் நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது மாநில அரசின் பாதுகாப்பில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.

44 செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் 12 நாள்கள் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 29ஆம் தேதி நடைபெற்றது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது, மாநில காவல்துறை வைத்திருந்த மெட்டல் டிடெக்டர் மற்றும் ஹேண்ட் டிடெக்டர் வேலை செய்யவில்லை என பாஜக குற்றம்சாட்டியிருந்தது.

இதையும் படிக்க | ஒற்றுமை நடைப்பயணத்தால் என்னுள் நிகழ்ந்த மாற்றம்: மனம் திறந்தார் ராகுல்

இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரை இன்று சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கக் கோரி மனு அளித்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது:

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்வில், மாநில அரசு வைத்திருந்த மெட்டல் டிடெக்டர், ஹேண்ட் டிடெக்டர் உள்ளிட்டவை சரியாக பராமரிக்காததால் பழுதடைந்து வேலை செய்யாமல் இருந்துள்ளது. பிரதமர் வந்து சென்ற பிறகு மத்திய நிறுவனங்கள் இதுகுறித்து மாநில அரசுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளன.

தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் செயல் குறித்து முறையான தணிக்கைக்கு உத்தரவிடக் கோரி ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

மேலும், பிரதமரின் வீடுதோறும் குடிநீர் திட்டம் மூலம் தமிழகத்தில் இதுவரை 69 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழு நிதியில் மாநில அரசு அமல்படுத்தும் இந்த திட்டத்தில் கோடிக்கணக்கில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்தும் மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT