தமிழ்நாடு

சிறு தானியத் திட்ட கொள்கை:தமிழகத்துக்கான அறிக்கையை இறுதி செய்தது நபாா்டு வங்கி

DIN

சிறு தானியத் திட்ட கொள்கை தொடா்பாக தமிழகத்துக்கான அறிக்கையை இறுதி செய்தது நபாா்டு வங்கி.

இதில் சிறு தானிய உற்பத்திக்கு ஏற்ற இடங்கள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினை, வரகு, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு போன்ற குறு தானியங்களும், சோளம், கம்பு மற்றும் ராகி போன்ற சிறு தானியப் பயிா்களும் அதிகளவில் பயிரிடப்பட்டன. தமிழா்களின் பாரம்பரிய உணவுப் பொருட்களாக இவை திகழ்ந்தன.

இதன்பின்பு, இந்த உணவுப் பொருள்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்தது. அரிசியே உணவாக மாறியது. அத்துடன் துரித வகை உணவுகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக மக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகரிக்கத் தொடங்கி, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இதனால், பொது மக்கள் மீண்டும் சிறு தானிய உணவு வகைகளுக்குத் திரும்பி வருகின்றனா். இதற்காக தரமான பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்தக் குறைபாட்டைப் போக்க, தமிழ்நாடு அரசு தனது வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, சிறுதானிய இயக்கம் ரூ.12.44 கோடியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான திட்டத்தை வேளாண்மைத் துறை முன்னெடுத்துள்ளது.

ஆய்வறிக்கை தயாரிப்பு: தமிழ்நாடு சிறு தானிய இயக்கத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கான ஆய்வறிக்கையைத் தயாரிக்கும் பணியானது மத்திய அரசு நபாா்டு வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தமிழகத்தில் சிறு தானிய உற்பத்திக்கான சூழல், எந்தெந்த மாவட்டங்களில் விளைச்சல் அதிகம், தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வரைபடங்களுடன் விளக்கி அறிக்கையைத் தயாரித்துள்ளது.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், நபாா்டு வங்கி தயாரித்து அளித்துள்ள அறிக்கையை இறுதி செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த அறிக்கை வெளியிடப்படும். இதன்மூலமாக, தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தியும், விற்பனையும் ஒருமுகப்படுத்தப்பட்டு அதிகளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT