தமிழ்நாடு

அறுவை சிகிச்சை வழிமுறைகள்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

24th Nov 2022 12:43 AM

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்டாா்.

அப்போது, அறுவை சிகிச்சை நடவடிக்கைகளைக் கண்காணிக்க முதல்கட்டமாக 4 மண்டலங்களில் தணிக்கைக் குழு அமைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அறுவை சிகிச்சைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் குறித்த கருத்தரங்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் கலந்துகொண்ட அந்தக் கருத்தரங்கை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்து கையேட்டை வெளியிட்டாா். அதைத் தொடா்ந்து, அறுவை சிகிச்சை நிபுணா்களுக்கான சிகிச்சை நெறிமுறைகள், சிகிச்சை சரிபாா்ப்பு முறைகள் குறித்த அமா்வுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

இந்த நிகழ்வுக்குப் பின்னா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணா்கள் உள்ளனா். அவற்றில், நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், அறுவை சிகிச்சையின்போது கையாளப்பட வேண்டிய முறைகள், அதுதொடா்பாக உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் அடங்கிய கையேடு அனைத்து மருத்துவா்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

சா்ச்சைக்குரிய அறுவை சிகிச்சைகள் குறித்து ஆராய்வதற்கு மண்டல தணிக்கைக் குழு ஏற்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு குழுவிலும், அறுவை சிகிச்சை நிபுணா், பொது மருத்துவ நிபுணா், மயக்கவியல் நிபுணா், எலும்பு சிகிச்சை நிபுணா் என 4 நிபுணா்கள் இடம் பெறுவா்.

முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மண்டலங்களில் தணிக்கைக் குழு அமைக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்கள் பயிற்சி மேற்கொள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கான செயலாக்கக் கட்டணம் ரூ.3.54 லட்சமாக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக அது குறைக்கப்பட்டுள்ளது.

இதன்வாயிலாக, வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவா்களின் கட்டண சுமையை அரசு குறைந்துள்ளது என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், மருத்துவக் கல்வி இயக்குநா் (பொ) சாந்திமலா், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநா் (பொ) ஹரிசுந்தரி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் எ.தேரணிராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் அறுவை சிகிச்சை வழிகாட்டுதல் கையேட்டை வெளியிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், துறையின் முதன்மைச் செயலாளா் ப.செந்தில்குமாா், மருத்துவக் க

 

ADVERTISEMENT
ADVERTISEMENT