தமிழ்நாடு

பெண் வன்கொடுமை: ராமேசுவரம் இறால் பண்ணைக்கு சீல்

25th May 2022 03:34 PM

ADVERTISEMENT

 

ராமேசுவரம் வடகாடு இறால் பண்ணையில் மீனவப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த சம்பவத்தைத் தொடர்ந்து இறால் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வன்கொடுமை செய்து கொன்று எரித்த சம்பவத்தில் தொடர்புடைய வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றிய இறால் பண்ணை, முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ராமேசுவரம் வடகாடு இறால் பண்ணையில் பணியாற்றிய வடமாநில இளைஞர்கள் 6 பேர் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தீ வைத்து எரித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து இறால் பண்ணையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடகாடு பகுதியை சேர்ந்த பாலு இவரது மனைவி சந்திரா(40) கடல் பாசி எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை காலையில் சந்திரா கடல் பாசி எடுக்க சென்றுள்ளர். இரவு வரை வீடு திரும்பவில்லை. 

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடகாடு பகுதி மக்கள்.

இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் தேடிச்சென்றுள்ளனர். இறால் பண்ணையில் நிர்வாண நிலையில் எரிந்த நிலையில் உடல் காணப்பட்டது. 

இதனை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இறால் பண்ணையில் இருந்தவர்கள் மீனவ பெண்ணை கூட்டு பாலியலுக்கு உள்படுத்தி எரித்துக் கொலை செய்துள்ளது தெரியவந்தது. 

இதையடுத்து, கிராம மக்கள் திரண்டு இறால் பண்ணைக்கு தீ வைத்துள்ளனர். அங்கு வந்த காவலர்கள் கூட்டு பாலியலுக்கு உள்படுத்திய 6 பேரை கைது செய்துள்ளனர். 

 

மேலும், கிராம மக்கள் திரண்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இறால் பண்ணையை விட்டு ஒடிசா மாநில இளைஞர்களை காவல்துறையினர் வெளியே கொண்டு வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் ராமநாதபுரத்தில் இருந்து காவலர்கள் விரைந்தனர்.

 

ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு  பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு கிராம பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT