தமிழ்நாடு

தஞ்சாவூரில் நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

25th May 2022 04:02 PM

ADVERTISEMENT

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் இயந்திர நடவுக்காக பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மே 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இந்நிலையில் திறக்கப்பட்ட தண்ணீர் மே  26 அல்லது 27 ஆம் தேதிக்குள் கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து மே 27 அல்லது 28 ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்னும் ஏழு நாட்களுக்குள் விளைநிலங்களுக்குள் தண்ணீர் வந்துவிடும் என்பதால், குறுவை முதற்கட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் இயந்திர நடவுக்காக, பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆடுதுறை 36, கோ 51, ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5 உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் தயார் செய்து கொண்டிருக்கின்றனர்.  

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இயந்திர நடவுக்காக நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், தற்போதே விதைநெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, கடந்த வாரங்களில் ஆடுதுறை 36 உள்ளிட்ட விதை நெல் 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று 150 ரூபாய் அதிகரித்து 1,150 ரூபாய்க்கு விற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் யூரியா போன்ற உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலையங்களில் கிடைப்பதில்லை என்றும், தனியார் உரக் கடைகளில் மட்டுமே விற்கப்படுவதாகவும், ஆனால் கடைகளில் சம்பந்தமே இல்லாத  வேறு உரங்களை கட்டாயப்படுத்தி விற்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

அந்த உரங்களை எதற்கு வாங்குகிறோம், எதற்குப் பயன்படும் என்று கூட தெரியவில்லை, எனவே, அதை முறைப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே அறுவடை பணிகள் நிறைவடைந்து விடும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT