தமிழ்நாடு

அதிர்ச்சியூட்டும் குடும்ப வன்முறை: நடவடிக்கை எடுக்க மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாகவே, குடும்ப வன்முறைச் சூழல் மிக மோசமாக இருந்ததைக் குடும்ப நல ஆய்வில் வெளியான விபரங்கள் காட்டியிருந்தன. தொற்றின் போது குடும்ப வன்முறை அதிகரித்த விபரங்களும் வந்தன. தற்போது சவீதா மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத்துறை, சென்னையில் திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த, பெரும்பாலும் 30வயதுக்கு மேற்பட்ட 250 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், குடும்பங்களில் நிலவும் கடுமையான சூழல் பற்றிய மேலதிக விபரங்கள் வந்துள்ளன.

அதன்படி, குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாக 38.2 சதவிகிதம் பெண்கள் தெரிவித்துள்ளார்கள். இது, ஆய்வுக்கு உட்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் குடும்ப வன்முறையை சந்திப்பதை எடுத்துக்காட்டுகிறது. அவர்களில் உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொள்வோர் 28.7 சதவிகிதம், பாலியல் வன்முறையை எதிர்கொண்டிருப்போர் 9.1 சதவிகிதம், உளவியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகியிருப்போர் 12.6 சதவிகிதம், உணர்வுரீதியான வன்முறையை சந்தித்தவர் 15.4 சதவிகிதம் ஆகும்.

திருமணத்திற்கு பின் ஒருமுறையாவது அறைவது, குத்துவது உள்ளிட்டு உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொண்டிருப்பதாக 28.7 சதவிகிதம் பேர் தெரிவித்திருக்கிறார்கள். சுய மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதும் அதிகமாக இருக்கிறது. வன்முறைக்கு ஆளான பெண்களில் 32.3 சதவிகிதம் பேர் மருத்துவ சிகிச்சையை நாட நேர்ந்திருப்பது நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள், பெரும்பாலும் குடிப்பழக்கம் மிகுதியாக கொண்டிருப்பதை ஏற்கனவே ஆய்வுகள் வெளிப்படுத்தின.

இந்த ஆய்விலும் அதுவே வெளிப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையைத் தடுக்க சட்டம் வந்த பின்னரும் கூட, ஆணாதிக்க சமூக கட்டமைப்பில், இது குற்றம் என்பதை விட, பெண்கள் சகித்து கொண்டு அல்லது அனுசரித்து போக வேண்டிய விஷயம் என்பதாகவே பார்க்கப்படுகிறது. திருமணத்துக்குப் பின், மனைவி தனித்துவம் இழந்து கணவனின் உடமையாகக் கருதப்படும் பெண்ணடிமைத்தன சிந்தனையின் வெளிப்பாடே இது. படித்த பெண்களும், பொருளாதார ரீதியாக சுயமாக முடிவு மேற்கொள்வோரும் வன்முறைக்கு ஆளானாலும், அது ஓரளவு குறைவாக உள்ளது என்பதும் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென சில நாட்களுக்கு முன் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியிருந்தோம். உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அதில் பட்டியலிட்டிருந்தோம். அதே கோரிக்கைகளை மீண்டும் வற்புறுத்த விரும்புகிறோம்.

குடும்ப வன்முறைக்கு எதிராகவும், குடும்ப கட்டமைப்பு ஜனநாயகப்படுத்தப்படுவதற்காகவும் தீவிர பிரச்சாரம் அனைத்து தளங்களிலும் முன்னெடுக்கப் பட வேண்டும். தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT