தமிழ்நாடு

14 காந்த குண்டுகளை விழுங்கிய 3 வயது சிறுமி: நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

12th May 2022 01:20 AM

ADVERTISEMENT

விளையாடும்போது 14 காந்த குண்டுகளை விழுங்கிய மூன்று வயது சிறுமிக்கு அதி நவீன அறுவை சிகிச்சை மூலம் மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். தவறுதலாக காந்த குண்டுகளை விழுங்கியதால் சிறுகுடலில் ஏற்பட்ட துவாரங்கள் மற்றும் நோய்த் தொற்றுகள் சரி செய்யப்பட்டு தற்போது அச்சிறுமி பூரண குணமடைந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மேத்தா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் கண்ணன் கூறியதாவது:

தீவிர வயிற்று வலி, வாந்தி மற்றும் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட மூன்று வயது சிறுமி ஒருவா் அண்மையில் வேலப்பன்சாவடி மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஜீரண மண்டல பாதிப்பு மற்றும் சிறுநீா்ப் பாதை கிருமித் தொற்றுக்கு முதலில் சிகிச்சையளிக்கப்பட்டு, அது பயனளிக்காத நிலையில் அச்சிறுமி மருத்துவமனைக்கு வந்தாா். சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவரது சிறுகுடல் பகுதியில் 14 காந்த குண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை விழுங்கி ஏறத்தாழ 7 நாள்களானதால் சிறுகுடலில் பல இடங்களில் துவாரங்கள் ஏற்பட்டிருந்தன. அதைத் தவிர அப்பகுதியில் கிருமித் தொற்று மற்றும் அமில வாயு சுரக்கும் பிரச்னைகள் இருந்தன.

இதையடுத்து மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் மது தலைமையிலான மருத்துவக் குழுவினா் லேப்ரோடமி அறுவை சிகிச்சையை அச்சிறுமிக்கு மேற்கொண்டனா். ஏறத்தாழ மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு வயிற்றில் இருந்த காந்த குண்டுகள் அகற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுத் தலைவா் டாக்டா் மனோஜ் தலைமையிலான குழுவினா், அந்த சிறுமிக்கு குருதியேற்ற சிகிச்சைகள் மற்றும் சிறுகுடலில் இருந்த பாதிப்புகளை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை அளித்தனா். அதன் பயனாக அவா் விரைந்து குணமடைந்தாா். காந்த குண்டுகளை விழுங்கி 7 நாள்களுக்குப் பிறகு பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி அவற்றை அகற்றியது மிகவும் சிக்கலான சிகிச்சையாகும். அதனை மேத்தா மருத்துவா்கள் சாத்தியமாக்கியுள்ளனா். சிறிய பொருள்களை குழந்தைகள் விளையாட பெற்றோா் அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT