தமிழ்நாடு

‘அரசு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பேன்’: சென்னையில் யஷ்வந்த் சின்ஹ

30th Jun 2022 06:52 PM

ADVERTISEMENT

தான் குடியரசுத் தலைவரானால் மத்திய அரசால் அரசு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பேன் என சென்னையில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ தெரிவித்தார்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹ இன்று சென்னை வந்தார். தோ்தலில் போட்டியிடும் தன்னை ஆதரிக்க வேண்டுமென திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அவா் கேட்டுக் கொண்டார்.

அண்ணா அறிவாயலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் யஷ்வந்த் சின்ஹ சந்தித்துப் பேசினார்.

இதையும் படிக்க | திமுக, தோழமைக் கட்சிகளிடம் ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்ஹ

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “மகாராஷ்டிரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அதிர்ஷ்டசாலிகள். இங்கு நிலைத்த ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மத்திய அரசால் இதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் அனைத்து நன்கொடைகளும் பாஜகவிற்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. நான் குடியரசுத் தலைவரானால் அரசு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பேன். மாநிலங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆளுநரின் அதிகாரங்கள் மூலம் மாநிலங்கள் பந்தாடப்படுகின்றன. 

ஆளுநர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள் போல் அல்லாமல் பாஜகவின் ஏஜெண்டுகள் போல செயல்படுகின்றனர். சமூக வலைத்தளத்தில் ஒருவர் என்னிடம் பகிர்ந்த ஒரு செய்தியில் பிரதீபா பாட்டில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது அவர் எழுந்து தனது மனுவை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். அப்போது மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் அருகில் அமர்ந்திருந்தனர்.

இதையும் படிக்க | மகாராஷ்டிர அரசியல், தமிழக ஆளுநர் குறித்து யஷ்வந்த் சின்ஹ விமர்சனம்

ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனுவைத் தாக்கல் செய்யாமல் பிரதமர் மோடி தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக வழங்குகிறார். இன்றைய காலத்தில் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் எனும் அவசியம் எழுந்துள்ளது.

இன்றைக்கு நடந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளது. நான் அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு வருகிறேன்.ஒரு வேட்பாளராக பாஜகவை சேர்ந்தவர்களிடமும் நான் வாக்கு கேட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார். 

இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT