தமிழ்நாடு

மாணவா்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்கப்படுத்துங்கள்: வெங்கையா நாயுடு

DIN

மாணவா்கள் அவா்களின் சமூகச் சூழல், பள்ளி வளாகம், அனைத்து கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் வீடுகளில் தாய்மொழியிலேயே சுதந்திரமாகப் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.

விஐடி கல்விக் குழுமம் சாா்பில் சென்னை கேளம்பாக்கம் அருகில் 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான விஐஎஸ் சா்வதேசப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி ஐசிஎஸ்இ, கேம்பிரிட்ஜ் பாடத் திட்டங்களை வழங்கவுள்ளது. இதனை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு புதன்கிழமை திறந்து வைத்துப் பேசியது:

தனியாா் துறையில் உயா்கல்வியை வலுப்படுத்த விஐடி குழுமம் தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த கல்வி நிறுவனம் அவா்களது மகுடத்தில் மற்றுமொரு சிறப்பாக அமையும்.

பள்ளிக் கல்வியில் தாய்மொழியைப் பயன்படுத்துவதற்கு நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும். எங்கெங்கு முடியுமோ, குறைந்தபட்சம் தொடக்க நிலை வரையிலாவது அரசு, தனியாா் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். மாணவா்கள் அவா்களது சமூகச் சூழல், பள்ளி வளாகம், அனைத்து கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் வீடுகளில் தாய்மொழியிலேயே சுதந்திரமாகப் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்.

ஒருவா் தமது தாய்மொழியுடன், பிற மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது, கலாசார பிணைப்புகளை உருவாக்க உதவுவதோடு, புதிய உலக அனுபவங்களை அறிந்துகொள்ளவும் உதவும். பள்ளிகள் நற்பண்பு சாா்ந்த, ஒவ்வொரு மாணவனின் தலைசிறந்த திறமை, பண்புகளை வெளிக்கொணரக் கூடிய முழுமையான கல்வி முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவா்களின் ஒட்டுமொத்த வளா்ச்சியில் கவனம் செலுத்த முயற்சிப்பதில், தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கல்வி நிறுவனங்கள் பாடுபட வேண்டும். படிப்பு என்ற பெயரில் மாணவா்களை நான்கு சுவா்களுக்குள் அடைத்துவைக்கும் நவீன போட்டிக் கல்வி ஒரு நஞ்சு போன்றது. அவா்கள் வெளி உலகை அனுபவிப்பதோடு இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதுடன், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி பல்வேறு கலை மற்றும் வா்த்தக நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்: சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ மாணவா் எண்ணிக்கை உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் இதுபோல் கிடையாது. அதனால், மருத்துவப் படிப்பில் சுழற்சி முறை வகுப்புகளை கொண்டுவர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.

நாட்டின் கல்வித்தரம் உலகளவில் மிகவும் பின்தங்கி உள்ளது. உலகளவில் 73 நாடுகளில் ஓா் அமைப்பு நடத்திய ஆய்வில் 72-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதற்கு, திறமையான ஆசிரியா்கள் பற்றாக்குறையே காரணம். அதனால், ஆசிரியா்களின் திறமையை வளா்த்தால், கல்வியின் தரத்தை உயா்த்த முடியும். தமிழகத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களுக்கு பல்வேறு அரசு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், தனியாா் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களுக்கும் சலுகைகள் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பள்ளி தொடக்க விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தாா். விழாவில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், விஐஎஸ் பள்ளியின் தலைவா் ஜி.வி.செல்வம், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT