தமிழ்நாடு

தாராபுரத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மக்கள் சாலை மறியல்

29th Jun 2022 12:15 PM

ADVERTISEMENT


திருப்பூர்: தாராபுரத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 4 ஆவது வார்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில், அப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நீண்ட நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. மேலும், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் தாராபுரம்-திருப்பூர் சாலையில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

ADVERTISEMENT

இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 4 ஆவது வார்டு பகுதிக்கு போர்வெல் மூலமாக தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகித்து வந்தனர். ஆனால், மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் கடந்த 20 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. 

மேலும், அமராவதி மற்றும் அமராவதி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக ஒரு மணி நேரம் மட்டுமே 2 பொதுக்குழாய்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீரை விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, வேறு வழியின்றி சாலைமறியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் காவல்துறையினர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பழுதடைந்துள்ள போர்வெல் மோட்டாரை சரிசெய்து சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். 

இதையும் படிக்க | சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 4 இல் வெளியாகலாம்: மத்திய கல்வி அமைச்சகம்

இதையடுத்து மறியலைக் கைவிட்ட மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக தாராபுரம்-திருப்பூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT