தமிழ்நாடு

சென்னையில் 366 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள்: மேயர் ஆர்.பிரியா 

DIN

சென்னையில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் 366 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 943 இடங்களில் 7,590 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இந்தக் கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. முதல்வரின் ஆலோசனையின் பேரில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றப் பேரவை மானியக் கோரிக்கையில், சென்னையில் பொதுக்கழிப்பிடங்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையிலும், சுகாதாரத்துடன் பராமரிக்கும் வகையிலும் மறுசீரமைக்கப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில், சென்னையில் 366 இடங்களில் சிதிலம் அடைந்த மற்றும் பயன்படுத்த உகந்த நிலையில் இல்லாத கழிப்பிடங்களை மறுசீரமைக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக்கழிப்பிடங்களை அமைக்கவும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36 கோடி தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டப் பணியின் கீழ் மேற்குறிப்பிட்ட 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்களும், 620 இருக்கைகள் கொண்ட சிறுநீர் கழிப்பிடங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டப்பணிகளுக்கான ஒப்பங்கள் கோரப்பட்டு 334 இடங்களில் பணிகளை தொடங்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் அமைக்கப்பட்டு வரும் பொதுக்கழிப்பிடங்கள் அனைத்தும் ஒரேவிதமாக இருக்கும் வகையில் ஆண்களுக்கான கழிப்பறை ஒரு வண்ணத்திலும், மகளிருக்கான கழிப்பறை ஒரு வண்ணத்திலும் அமைக்கப்பட உள்ளது. மேலும், ஒவ்வொரு இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தள வசதியுடனும் இந்தக் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளதாக மேயர்  ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். முன்னதாக, மாதவரம் மண்டலத்தில் இன்று (24.06.2022) நடைபெற்ற மண்டல அளவிலான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு மேயர் ஆர்.பிரியா மாதவரம் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பொதுக்கழிப்பிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மேயர், மழைநீர் வடிகாலில் மனித நுழைவு வாயில் மூடிகளை சேதாரமின்றி திறப்பதற்காக வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.சிவகுரு பிரபாகரனின் ஆலோசனையின்பேரில் இயந்திரப் பொறியியல் துறையினரால் உருவாக்கப்பட்ட ஹைட்ராலிக் மற்றும் கைகளால் இயக்கி திறக்கும் உபகரணத்தின் செயல்பாட்டினை மாதவரம் மண்டலம், வார்டு-25, எம்.டி.எச். சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மனித நுழைவு வாயிலில் இயக்கி ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.நந்தகோபால், ஆளுங்கட்சித் தலைவர் ந. இராமலிங்கம், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT