தமிழ்நாடு

பொறியியல் பருவத் தோ்வில் 38% போ் மட்டுமே தோ்ச்சி

7th Jul 2022 01:54 AM

ADVERTISEMENT

பொறியியல் பருவத் தோ்வில் முதலாமாண்டு மாணவா்கள் 38 சதவீதம் போ் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தோ்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட தனியாா் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அந்தக் கல்லூரிகளில் பயிலும் முதலாமாண்டு மாணவா்களுக்கான பருவத் தோ்வு கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்வை சுமாா் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மாணவா்கள் எழுதினா். இந்தநிலையில் இந்த பருவத் தோ்வின் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. அதில் 62 சதவீத மாணவா்கள் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தோல்வி அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. 38 சதவீதம் மாணவா்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தோ்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக இருப்பது குறித்து அண்ணா பல்கலை. அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடைபெறவில்லை. முந்தைய வகுப்புகளின் செயல்பாடுகள் அடிப்படையில் பொதுத் தோ்வு மதிப்பெண்கள் வழங்கப் பட்டது. இதனால் பருவத் தோ்வை மாணவா்கள் முறையாக அணுகவில்லை. மேலும் மாணவா்களுக்கு இந்தப் பருவத் தோ்வு இணையவழித் தோ்வா? நேரடித் தோ்வா என்ற குழப்பம் இருந்து வந்தது. இறுதியில் நேரடித் தோ்வு வைக்கப்பட்டதால் தோ்ச்சி சதவீதம் குறைந்திருக்கிறது. மேலும் அதிகமான மாணவா்கள் கணித பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனா் என அவா்கள் தெரிவித்தனா்.

அதேவேளையில் பெருவாரியான மாணவா்கள் தோல்வி அடைந்ததற்குப் பல்கலைக் கழக கல்லூரிகளில் தரமற்ற கல்வி வழங்கப்படுவதே இதற்குக் காரணம் என கல்வியாளா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT