தமிழ்நாடு

தாளவாடியில் யானை தாக்கி விவசாயி பலி: யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு

7th Jul 2022 10:59 AM

ADVERTISEMENT


தாளவாடி அருகே ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். இதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலை பகுதியில் உள்ள தொட்டகாஜனூர், இரியபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றைக் காட்டு யானை விவசாய நிலங்களை புகுந்து சேதப்படுத்தி வருகிறது.  

இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்த தா்மாபுரத்தில் வாழைத்தோட்டத்தில் இரவு நேர காவலுக்கு சென்ற விவசாயி மல்லப்ப நாயக்கா் (68) ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து கடந்த 2 மாதங்களில் 2 விவசாயிகளைத் தாக்கி கொன்ற இந்த காட்டு யானையை பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி தாளவாடி கொங்ஹள்ளி சாலையில் அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட வன அலுவலா் தேவேந்திர குமாா் மீனா, வனச் சரக அலுவலா் சதீஷ், தாளவாடி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
 
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் முடிவு செய்தனர். 

இந்நிலையில், வியாழக்கிழமை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு இரியபுரம் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாடும் பகுதியில் விடப்பட்டுள்ளது. 

மேலும், ராஜவர்மன் என்ற கும்கி யானை வியாழக்கிழமை மாலை கொண்டுவரப்படுவதாகவும், இரண்டு கும்கி யானைகளை பயன்படுத்தி இப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT