தமிழ்நாடு

நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசனம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

6th Jul 2022 06:00 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் புதன்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு நடைபெற்றது. நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', 'சிவசிவா' என கோஷமிட்டு தரிசனத்தைக் கண்டுகளித்தனர்.

ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 5-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.  பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. மகாபிஷேக விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிஸ பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3.40 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். ஜூலை 7-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

ADVERTISEMENT

உற்சவ ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலாளர் சிஎஸ்எஸ்.ஹேமசபேச தீட்சிதர், துணைச் செயலாளர் கே.சேது அப்பாச்செல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் க.ந.கனகசபாபதி தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் தலைமையில் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். போலீசாருக்கு உதவியாக ஊர்காவல் படையினர், என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அன்னதானம்

கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கீழரதவீதியில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் ஜகநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் பி.சுவாமிநாதன், வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், மாவட்ட பொருளாளர் மனோகரன், கோபாலன் மற்றும் சேவா சங்க நிர்வாகிகள் வி.சங்கர், கே.கணேசன், சிவக்குமார், குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT