தமிழ்நாடு

காரைக்காலில் ரூ.80 கோடியில் அரசு  மருத்துவமனை விரிவாக்கப் பணி: முதல்வர் என்.ரங்கசாமி

5th Jul 2022 01:42 PM

ADVERTISEMENT


காரைக்கால் : காரைக்காலில் அரசு பொது மருத்துவமனை அருகே கூடுதல்  வசதியுடன் கூடிய விரிவாக்கக் கட்டடம் ரூ.80 கோடியில் விரைவில் கட்டப்படவுள்ளதாக புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

காரைக்காலில் வயிற்றுப் போக்கால் பலர் பாதித்த நிலையில், புதுவை முதல்வர் என்.ரங்கசாமி காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.

மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள், தூய்மைப்  பணிகள் மற்றும் அரசு பொது  மருத்துவனையை ஆய்வு செய்த முதல்வர், ஆட்சியரகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர்  அவர்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காரைக்காலில் வயிற்றுப்போக்கால்  பலர் பாதிக்கப்படுவதையொட்டி,  சுகாதாரத்தறை, பொதுப்பணித்துறையினர் உள்ளிட்டோர் தீவிரமாக பணியாற்றி  வருகின்றனர். இதன் காரணமாக காலரா என்பது  காரைக்காலில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகரப் பகுதி, கிராமப் பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் தூய்மைப் பணி செய்து குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


 
அரசு மருத்துவமனையில் தற்போது 25  நோயாளிகள் மட்டுமே வயிற்றுப்போக்கால் பாதித்து  சிகிச்சை பெறுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகள் வருங்காலத்தில் வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க அரசுத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் பல பகுதிகளில் பழைய குழாய்களை  மாற்றி ரூ.50 கோடியில் புதிதாக  குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

அரசு பொது மருத்துவமனை அருகே 3.5 ஏக்கர் நிலத்தில், கூடுதலாக ரூ.80 கோடியில் மருத்துவனைக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இதில் அனைத்து வசதிகளும்  இடம்பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

காரைக்கால் நகரப்  பகுதியில் வடிகால், கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள்  மணல் தளமாக இருக்கிறது. இதனை சிமெண்ட் தளமாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. தற்போது காரைக்கால் நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் புதிதாக குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் விரைவில் இணைப்பு தரப்படும்.

அகலங்கண்ணு ஆழ்குழாய் கிணறு  முதல் புதிதாக ரூ.16 கோடியில் குழாய் பதிக்கும் பணியும் நடைபெறவுள்ளது. சர்வீஸ் பிளேஸ்மென்ட் முறையில் மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தால் அவர்களை குறித்த இடத்துக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் புதிதாக எந்தவொரு துறையிலும் பணியாளர்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் 10 ஆயிரம் பணியிடம் காலியாகிவிட்டன. எங்கள் அரசு, அனைத்துத் துறையிலும் காலியாக உள்ள பணியிடங்களை  நிரப்ப  நடவடிக்கை எடுத்து, துறைவாரியாக நிரப்பும் பணிகளை செய்துவருகிறது.

காரைக்கால் வளர்ச்சி பெறவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதனடிப்படியிலேயே ஜிப்மர் கல்லூரி காரைக்காலில் அமைக்கப்பட்டது.  அரசு  பொறியியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்டப்படவுள்ளது.  மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. காரைக்காலுக்கு இனிமேல் அடிக்கடி வருவேன். மக்கள் அனைவரும் காலரா போன்ற நோய்களில் சிக்காமல், மருத்துவத் துறையினர் கூறும் ஆலோசனையின்படி நடந்துகொள்ளவேண்டும் என்றார்.

முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.சிவா, ஆட்சியர் எல்.முகமது மன்சூர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.லோகேஸ்வரன், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT