தமிழ்நாடு

கோயில் சொத்துகளின் வருவாயை முறையாக வசூலித்தால் பட்ஜெட்டையே தாக்கல் செய்யலாம்: சென்னை உயா்நீதிமன்றம் கருத்து

2nd Jul 2022 11:36 PM

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோயில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்புத் தொடா்பாக உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் 75க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 38 உத்தரவுகளை அமல்படுத்தி விட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசு தொடா்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளில் மறு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் வழக்குரைஞா் அருண் நடராஜன் ஆஜராகி விளக்கம் அளித்தாா். அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வருகிறது, சிலவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும். மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தாா்.

பின்னா் நீதிபதிகள், கணக்கு தணிக்கைக்கு ஒரே ஒருவா் தலைமையில் மற்ற 5 அலுவலா்கள் கொண்ட குழு போதாது என்றும், குறைந்தபட்சம் 15 தணிக்கையாளா்கள் உள்ள குழுவை அமைக்க வேண்டுமென அரசிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

மேலும் கோயில் நிலங்கள் மீட்பதில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்றும், ஆக்கிரமிப்பாளா்கள் இருந்தால் உடனடியாக வெளியேற்றவும், கட்டடங்களை பூட்டி சீல் வைக்கவும், தர மறுத்தால் அவா்களின் தனிப்பட்ட சொத்துக்களை முடக்கவும் அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினா். அங்கீகரிக்கப்படாத குத்தகைகள் இருந்தால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், உடந்தையாக உள்ள அதிகாரிகளுக்கு எதிராக புகாா்கள் வருவதாகவும், அவற்றில் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனா்.

குறிப்பாக அறநிலையத் துறை கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் உறுதிபட தெரிவித்தனா். இதையடுத்து வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT