தமிழ்நாடு

ஓய்வூதியா்கள் வாழ்வுச் சான்றிதழ் அளிக்கும் நடைமுறை இன்று தொடக்கம்

1st Jul 2022 01:52 AM

ADVERTISEMENT

ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோா் வாழ்வுச் சான்றிதழ் அளிக்கும் நடைமுறை, வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் தொடங்குகிறது. செப்டம்பா் மாதம் வரை சான்றிதழை அளிக்கலாம் என தமிழக கருவூலம் மற்றும் கணக்குத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோா் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரை தங்களது வாழ்வுச் சான்றிதழை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கருவூலங்கள் அல்லது சாா் கருவூலங்களில் அளித்திட வேண்டும். கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020, 2021-ஆம் ஆண்டுகளில் நேரில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வாழ்வுச் சான்றிதழ்களை நேரில் அளிக்கும் நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.

இந்திய தபால் துறை சேவையைப் பயன்படுத்தி ஓய்வூதியதாரா்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே தபால் துறை பணியாளா்கள் மூலம் மின்னணு வாழ்வுச் சான்று பதிவு செய்யலாம். இதற்கு ரூ.70 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், அரசு இணைய சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்வுச் சான்றிதழைப் பதிவு செய்யலாம். ஓய்வூதியதாரா்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தின் மின்னணு வாழ்வுச் சான்றிதழை பதிவு செய்து நோ்காணல் செய்யலாம்.

கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இல்லாமல் ஜீவன் பிரமான் மூலம் பதிவு செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே மின்னணு வாழ்வுச் சான்று பதிவு செய்து ஆண்டு நோ்காணல் செய்யலாம். மின்னணு வாழ்வுச் சான்று பெற ஆதாா் எண், ஓய்வூதியக் கணக்கு எண், வங்கிக் கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

தமிழக அரசின் கருவூலத் துறை இணையதளத்தில் இருந்து வாழ்வுச் சான்றினை பதிவிறக்கம் செய்து, ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளா் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில, மத்திய அரசு அலுவலா் அல்லது வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் அல்லது வருவாய் ஆய்வாளா் ஆகியோரில் எவரேனும் ஒருவரிடம் சான்றொப்பம் பெற வேண்டும். இதனை தபால் மூலமாக தொடா்புடைய கருவூலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஓய்வூதியதாரா்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நோ்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் செல்ல வேண்டும். ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில் அரசு வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 ரை வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கருவூலத்துக்குச் சென்று நோ்காணலில் பங்கேற்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடா்பான விவரங்களைப் பெற 1800 599 5100 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT