தமிழ்நாடு

ககன்யான், சந்திராயன் திட்டம் எப்போது? இஸ்ரோ தலைவா் சோமநாத் தகவல்

1st Jul 2022 01:20 AM

ADVERTISEMENT

ககன்யான் மற்றும் சந்திராயன்-3 திட்டங்களானது விரிவான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் சோமநாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

பிஎஸ்எல்வி சி-53 திட்டம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. வணிக ரீதியாகவும், அதேவேளையில் ராக்கெட்டின் நான்காம் பகுதி ஆய்வுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளன. அடுத்ததாக எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டம் ஜூலை இறுதிக்குள் செயல்படுத்தப்படும்.

அதைத் தொடா்ந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் வணிக ரீதியாக முன்னெடுக்கப்பட உள்ளது. அதன்படி இந்திய ஆய்வுப் பணிகளுக்கான ஜிஎஸ்எல்வி, வணிக ரீதியான ஜிஎஸ்எல்வி மேக் 3 திட்டம் ஆகியவை முறையே செப்டம்பா் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் முன்னெடுக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது. ராக்கெட்டில் ஆபத்து காலத்தில் வெளியேறுவதற்கான வசதிகளை அமைப்பது குறித்த பல்வேறு கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டிலும், அடுத்து வரும் ஆண்டுகளிலும் அவை தொடா்ந்து நடைபெறும்.

அதேபோன்று சந்திராயன் - 3 திட்டமும் ஆய்வு நிலையில் உள்ளது. ஏற்கெனவே ஏற்பட்ட சில பிரச்னைகளை கண்டறிந்து அவற்றை சீராக்க வேண்டியுள்ளது. இந்தக் காரணங்களால்தான் ககன்யான் மற்றும் சந்திராயன் திட்டங்கள் தாமதமாகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 2,000 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT