தமிழ்நாடு

திருப்பூர் நகருக்குள் புகுந்த சிறுத்தை: மக்கள் அச்சம்

27th Jan 2022 10:37 AM

ADVERTISEMENT

அவிநாசி: திருப்பூர் அருகே  தண்ணீர்பந்தல் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த முதியவரைத் தாக்கியதில் அவர் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள ஊரடித் தோட்டத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்த சிறுத்தை தீவனப் பயிர் அறுவடை செய்து கொண்டிருந்த விவசாயி வரதராஜன், கூலி தொழிலாளி மாறறன் ஆகியோரைத் தாக்கியது. இதையடுத்து, வெங்கடாசலம், மோகன்ராஜ், அமராவதி வனச் சரக வேட்டைத் தடுப்புக் காவலர் மணிகண்டன் ஆகியோரையும் பதுக்கியிருந்த சிறுத்தை அடுத்தடுத்து தாக்கியது. தொடர்ந்து வனத் துறையினர் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் பல்வேறு வழிகளில் சிறுத்தையைப் பிடிக்க முயன்றும் சிறுத்தை குறித்து எவ்வித அறிகுறியும் இல்லாததால், பாப்பாங்குளம் தோட்டத்துப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக செவ்வாய்க்கிழமை மாலை உறுதி செய்தனர்.

இதற்கிடையில் பெருமாநல்லூர் அருகே பொங்குபாளையம் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை வந்துவிட்டதாக தகவலையடுத்து, வனத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் புதன்கிழமை காலை பொங்குபாளையம் பகுதியில் துரை என்பவரது தோட்டத்துக்குள் சிறுத்தையின் கால் தடம், எச்சம் ஆகியவை இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற வனத் துறைறயினர், கால் தடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் எச்சத்தை (கழிவை) ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர். பிறகு காலை முதலே பொங்குபாளையம் பகுதியில், கண்காணிப்புப் பணியை வனத் துறையினர் தீவிரப்படுத்தினர். இதற்கிடையில் பொங்குபாளையம் தோட்டத்தில் இருந்த  சிறுத்தை புதன்கிழமை மாலை, அங்கிருந்த நாயைத் தாக்கியதில் நாய் உயிரிழந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, வனத்துறையினர், பெருமாநல்லூர், பொங்குபாளையம், பரமசிவம்பாளையம், ஈட்டிவீராம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட அருகருகே உள்ள 20 கிராமங்களில் புதிதாக 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தி, 50 பேர் கொண்ட 5 குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், 4வது நாளாக  வியாழக்கிழமை காலை திருப்பூர் சாலை அம்மாபாளையம் அருகே தண்ணீர்பந்தல் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த பழைய இரும்பு வியாபாரி ராஜேந்திரன்(60) என்பவரைத் தாக்கியது.

சிறுத்தை தாக்கப்பட்ட ராஜேந்திரன்

உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, காவல்துறையினருடன் இணைந்து தண்ணீர்பந்தல் தனியார் நிறுவனம் அருகே சிறுத்தை இருப்பதை உறுதி செய்து அங்கு முகாமிட்டு தீவிரமாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT