தமிழ்நாடு

ஆன்லைனில் பருவத்தேர்வுகள்: மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

25th Jan 2022 01:26 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் கல்லூரி மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பருவத் தோ்வுகள் வரும் பிப்.1 முதல் 20-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும் என உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்துள்ளார்.

ஆன்லைனில் பருவத் தேர்வுகளை நடத்துவது குறித்து அமைச்சர் க. பொன்முடி சென்னையில் கடந்தவாரம் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் வரும் பிப். 1 முதல் அனைத்து அரசு கலை கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இணையவழியில் பருவத் தோ்வுகள் நடத்தப்படும். இந்தத் தோ்வுகள் பிப்.20-ஆம் தேதி வரை நடைபெறும்.

தோ்வுகள் குறித்து மாணவா்கள் அச்சப்படத் தேவையில்லை. அவா்கள் விரும்பும் வகையில் தோ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அரசின் தரப்பில் செய்து தரப்படும். தோ்வுக்கான உரிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டு உரிய முறையில் தோ்வுகள் நடைபெறும்.

இதையும் படிக்க.. உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடி

ADVERTISEMENT

இறுதியாண்டு மாணவா்களுக்கு: 

இணையவழித் தோ்வுகள் அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியாக நடத்தப்படும். இறுதியாண்டு மாணவா்களுக்கு இறுதி பருவத் தோ்வுகள் நேரடியாக மட்டுமே நடத்தப்படும். கல்வியின் தரத்தை உறுதி செய்யவே இறுதி பருவத் தோ்வு நேரடியாக நடைபெறுகிறது. இணையவழியிலான தோ்வில் முறைகேடுகள் நடக்காத வண்ணம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோ்வுக்கான விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யவும், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து, அன்றைய நாளே, ஆன்லைனில் நடத்தப்படும் கல்லூரி பருவத் தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், 
1. கல்லூரி மாணவர்களுக்கு 2021ஆம் ஆண்டு நவம்பர்/டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய பருவத் தேர்வுகள் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ஆன்லைன் மூலம் நடைபெறும்.
2. ஆன்லைன் தேர்வுக்கான நேரம் 3 மணி நேரம். காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், பிற்பகலில் 2 மணி முதல் 5 மணிவரையும் தேர்வுகள் நடைபெறும்.
3. வினாத்தாள்கள் பல்கலைக்கழகத்திலிருந்து அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பல்கலைக்கழக இணையதளத்திலும் பதிவேற்றப்படும்.
4. வினாத்தாள்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வு நடைபெறும் நாளன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், பிற்பகலில் நடைபெறும் தேர்வுக்கான வினாத்தாள் 1.30 - 2. 30 மணி வரையிலும் கிடைக்கும்.
5. மாணவர்கள் ஏ4 காகிதங்களில் மட்டுமே அனைத்து விடைகளையும் 40 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
6. மாணவர்கள் தங்களது கல்லூரி பதிவு எண், பாடப்பிரிவின் எண், பக்க எண், மையத்தின் எண் மற்றும் கையெழுத்து ஆகியவை ஒவ்வொரு விடைத்தாளின் வலதுப் பக்க மேல் பகுதியில் எழுதியிருக்க வேண்டும்.
7. கல்லூரியின் தலைமை பேராசிரியர்கள் / முதன்மை கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனி மண்டல அலுவலர்கள் நியமித்து, தனித்தனி வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி நிர்வகிக்க அறிவுறுத்தப்படுகிறது.
8. கல்லூரிகள் தங்களது மண்டல அதிகாரிகளின் தொடர்பு எண்கள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்ப வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களது மண்டல அதிகாரிகளை வாட்ஸ்ஆப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.
9. ஆன்லைன் மூலம் தேர்வெழுதுவதற்கு, வீட்டில் வசதி இல்லாத கல்லுரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் தேர்வெழுதுவதற்கான வசதியை கல்லூரி தலைமை பேராசிரியர்கள் / முதன்மை கண்காணிப்பாளர்கள் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
10. கல்லூரி தலைமை பேராசிரியர்கள் / முதன்மை கண்காணிப்பாளர்கள் தான், மாணவர்களிடமிருந்து விடைத்தாள்களை பெறுவதற்கு பொறுப்பு. கல்லூரியின் முகவரியை அனுப்பி, அனைத்து மாணவர்களும் தங்களது விடைத்தாளை துரித தபால் அல்லது கொரியர் மூலம் உரிய கவரில் போட்டு கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

11. மாணவர்கள்  தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்துக்குள், தங்களது விடைத்தாள்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் அல்லது இணையதளம் அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிவைத்துவிட வேண்டும். தவறினால் விடுப்பாகக் கருதப்படும். மேலும், விடைத்தாள்கள் அனைத்தும் கல்லூரி அல்லது பல்கலைக்கு தபால் மூலமாகவோ நேரிலோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
12. கருப்பு அல்லது நீல நிறப் பேனாவில் மட்டுமே எழுத வேண்டும். அச்சடித்ததாகவோ, புத்தகத்திலிருப்பதை நகலெடுத்து அப்படியே ஒட்டியோ கொடுக்கக் கூடாது.
13. வினாத்தாள் கிடைத்ததும், உடனடியாக வாட்ஸ்ஆப் குழுவில் டவுன்லோடட் என்று டைப் செய்து, தனக்கு வினாத்தாள் கிடைத்ததை ஒவ்வொரு மாணவரும் உறுதி செய்ய வேண்டும்.
14. வாட்ஸ்ஆப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களிடமிருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்களின் வருகைப் பதிவை பாடப்பிரிவுக்கான அதிகாரி இஆர்எஸ் மூலம் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT