தமிழ்நாடு

செங்கல்பட்டு பெருமாள் கோயிலில் மகா பெரியவர் உருவச்சிலைக்கு சிறப்புப் பூஜை

25th Jan 2022 04:42 PM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு மாவட்டம் அம்மணப்பாக்கம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ள நிலையில் அச்சிலைக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்புப் பூஜைகள் செய்து அனுப்பி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் அம்மணப்பாக்கத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 450 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ அகோபில மடத்தின் 3வது அழகிய சிங்கரான ஸ்ரீவண்சடகோப ஸ்ரீபராங்குச யதீந்திர மகாதேசிகன் அவர்களால் நிறுவப்பட்டது. திருமணத்தடை நீங்குவதும், புத்திர பாக்கியம் தரும் சிறப்புக்களை உடைய இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

இக்கோயிலின் உபய மூர்த்திகளாக சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவித் தாயார், சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சிலைகளும் உள்ளன. இக்கோயிலில் காஞ்சி சங்கர மடத்தின் 68வது பீடாதிபதியாக இருந்துவந்த மகா பெரியவர் என்று பக்தர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் உருவச்சிலையும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

ADVERTISEMENT

மகாபெரியர் சத்சங்கம் உதவியுடன் இச்சிலை லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள நிலையில் ஆந்திராவில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் காண்பித்து அங்கு அவரால் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் அச்சிலை காஞ்சி சங்கர மடத்துக்குக் கொண்டு வரப்பட்டு அங்கும் சிறப்புப் பூஜைகள் நடந்தன.

இதுகுறித்து அக்கோயிலைச் சேர்ந்த ராஜா பட்டர் கூறுகையில்,

வைணவ ஆலயத்தில் மகா பெரியவர் சிலை வைப்பது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவித்தார். சங்கர மடத்தில் நடந்த சிறப்புப் பூஜையின் போது மகா பெரியவர் சத்சங்கத்தின் நிர்வாகிகள் ராமன், நாகராஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT