தமிழ்நாடு

இளையான்குடி நகரத்துக்குள் புதிய பேருந்து நிலையம் கோரி கடையடைப்புப் போராட்டம் 

24th Jan 2022 04:09 PM

ADVERTISEMENT

 

மானாமதுரை: இளையான்குடியில் புதிய பேருந்து நிலையத்தை நகருக்குள் அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த  மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிதாக அமையவுள்ள  பேருந்து நிலையத்தை நகருக்குள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இளையான்குடியில்  மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் காஜா மைதீன்  தலைமை தாங்கினார். 

ADVERTISEMENT

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத்,  தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ், மாநில வர்த்தக அணி துணைச்  செயலாளர் சாகுல் ஹமீது சேட் உள்ளிட்டோர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இளையான்குடி நகர்ப் பகுதிக்கு செயலாளராக பசீர் அகமது' பொருளாளராக உஸ்மான்' அலி   துணைச் செயலாளர்களாக சலீம், புதூர் உசேன், சோதுகுடி சேக், அபுபக்கர், மகபூப், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக சதாம் உசேன், மருத்துவ அணி செயலாளராக முஸ்தபா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 
இளையான்குடி பகுதியில் கட்சி சார்பில் சேவை மனப்பான்மையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தை மாற்றிவிட்டு  நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி பொதுமக்கள் சேவைக்காக பயன்படுத்தப்படும்.

வழக்கம்போல் போல்  நடப்பாண்டிலும் இளையான்குடி பகுதியில் ரத்ததான முகாம்கள் நடத்தப்படும்.

இளையான்குடி பேரூராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேடு  மற்றும் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து கட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

இளையான்குடி நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஊருக்கு வெளியே இடம் தேர்வு  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எனவே இந்த முடிவை கைவிட்டு பொது மக்களுக்கு பயன்படும் வகையில்  இளையான்குடி நகருக்குள் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைத்திட  வலியுறுத்தி மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் இளையான்குடியில் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்படுகிறது. 

கூட்டத்தில் கட்சியின் இளையான்குடி பகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர்ப் பொருளாளர் உஸ்மான் அலி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT