தமிழ்நாடு

அச்சுறுத்தும் புயல்: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகள் திறப்பு

DIN


சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அமைந்திருக்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கையாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இம்மூன்று ஏரிகளும் சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்குபவை.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் மாண்டஸ் புயல் தீவிரப் புயலாக இருந்து வலுவிழந்து புயலாக மாறியிருக்கும் நிலையில், இது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் உள்ளிட்ட 3 ஏரிகளில் இருந்தும் பகல் 12 மணியிலிருந்து தலா 100 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

புழல் ஏரிக்கு வினாடிக்கு 140 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த கொள்ளளவு 21 அடியாகும். இன்று காலை நிலவரப்படி இந்த ஏரியில் 17 அடிக்கு நீர் நிரம்பியிருக்கிறது. 

இதுபோல, செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரியிலிருந்தும் வினாடிக்கு தலா 100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.9, 10) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதி பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் அதி பலத்த மழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சை, புதுக்கோட்டை, கரூா், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

சனிக்கிழமை (டிச.10) சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT