தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்து தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று (டிச.9) நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அரசுப் பேருந்துகள் இன்று இரவு இயங்குமா? - போக்குவரத்துத் துறை விளக்கம்!
இதையொட்டி புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(டிச.9) இரவு அரசுப் பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.
இதையடுத்து ஆம்னி பேருந்துகள் இயங்குமா என்று கேள்வி எழுந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இதுவரை அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும் எனவே, ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல இயங்கும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து விளக்கம் தெரிவித்துள்ள போக்குவரத்துத் துறை, புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மட்டும் குறிப்பாக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் பேருந்து சேவை இருக்காது என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.