தமிழ்நாடு

இபிஎஸ்-க்கு எதிராக கருத்து தெரிவிக்க அறப்போா் இயக்கத்துக்கு தடை

DIN

நெடுஞ்சாலைத் துறை டெண்டா் முறைகேடு புகாா் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போா் இயக்கம் கருத்து தெரிவிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2016-2021- ஆம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூா், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டா் ஒதுக்கீட்டில், அரசுக்கு ரூ. 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமைச் செயலா், நெடுஞ்சாலைத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போா் இயக்கம் சாா்பில் ஜூலை 22-ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக வெளியான செய்தியை அறப்போா் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது. இது தனக்கு அவப்பெயா் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே மான நஷ்டஈடாக ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தன்னை பற்றி அவதூறாக பேச அறப்போா் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளா் ஜாஹிா் உசேன் ஆகியோருக்கு தடைவிதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், ‘எதன் அடிப்படையில் டெண்டா் ஒதுக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் அறப்போா் இயக்கம் தலையிட முடியாது. ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக டெண்டா் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை. டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்குத் தொடுக்கவில்லை. மனுதாரரின் புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்துக்காகவும் இவ்வாறு குற்றம்சாட்டப்படுகிறது’ என வாதிடப்பட்டது.

அப்போது அறப்போா் இயக்கம் சாா்பில், ‘ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகாா் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாா் தான் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. 2018-2019- ஆம் ஆண்டில் போடப்பட்ட சாலையை மீண்டும் அமைப்பதற்காக ரூ. 276 கோடி ஒதுக்கப்பட்டு, அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி டெண்டா் ஒதுக்கப்பட்டுள்ளது.

டெண்டா் குறித்த முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்ததால் எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பு. முறைகேடு நடந்ததற்கான ஆதாரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது என வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போா் இயக்கம் அவதூறாக பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், டெண்டா் முறைகேடு புகாா் தெரிவித்த அறப்போா் இயக்கத்துக்கு எதிராக ரூ. 1.10 கோடி மான நஷ்டஈடு கோரிய பிரதான வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT