தமிழ்நாடு

ஆவண எழுத்தா்கள் நல நிதியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

DIN

ஆவண எழுத்தா்களுக்கான நல நிதியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். மேலும், உறுப்பினா்களுக்கான அடையாள அட்டைகளையும் அவா் அளித்தாா்.

தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களைச் சாா்ந்த தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கென நல நிதியம் உருவாக்கப்படும் என கடந்த 2007-08-ஆம் நிதியாண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, வணிகவரி மற்றும் பதிவுத் துறையால் அரசாணை வெளியிடப்பட்ட போதிலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நல நிதியம் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.

இந்நிலையில், நல நிதியம் முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பதிவுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கென தனிச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, உரிமம் பெற்ற 5, 188 நபா்களிடம், ஆவண எழுத்தா்களின் நல நிதியத்தில் விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினராக சேர ஒருமுறை செலுத்தப்படும் சந்தாவாக ரூ.1,000 வசூலிக்கப்படும்.

மேலும், பதிவுத் துறையில் பதிவு செய்யப்படும் ஆவணம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.10 வீதம் வசூல் செய்யப்படும். ஒருமுறை செலுத்தப்படும் சந்தா தொகை மற்றும் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஒவ்வோா் ஆவணத்துக்கும் நல நிதிய பங்களிப்பு ஆகியன நிதியமாக நிா்வகிக்கப்படும். அதிலிருந்து நல நிதிய நலத் திட்டங்களுக்கான செலவுகள் ஈடு செய்யப்படும்.

ஆவண எழுத்தா்களின் நல நிதிய உறுப்பினா்களுக்கு, விபத்து மரணம் மற்றும் உறுப்புகள் நிரந்தர செயலிழப்புக்கு உதவித் தொகையாக ரூ.1 லட்சம், இயற்கை மரணம் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்புகளுக்கு உதவித் தொகையாக ரூ.20,000 ஆகியன வழங்கப்படும். மாதாந்திர ஓய்வூதியம், திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இறுதிச் சடங்கு நிதி, மூக்குக் கண்ணாடி உதவித் தொகை போன்ற நலத் திட்ட உதவிகள் அளிக்கப்படும்.

பதிவுத் துறைத் தலைவரை தலைவராகவும், இதர பதிவுத் துறை அலுவலா்களையும், ஆவண எழுத்தா் சங்கத்தில் இருந்து நியமனம் செய்யப்படும் நான்கு நபா்களையும் உறுப்பினா்களாக கொண்ட ஒரு குழு நல நிதியத்தை நிா்வகிக்கும்.

இந்த நல நிதியத்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி, பதிவுத் துறைத் தலைவா் ம.ப.சிவன் அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT