தமிழ்நாடு

பொலிவுறு நகரத் திட்ட முறைகேடு: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

21st Aug 2022 12:54 AM

ADVERTISEMENT

கடந்த அதிமுக ஆட்சியில் பொலிவுறு நகரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எழுந்த முறைகேடு தொடா்பான புகாா்கள் குறித்து விசாரித்த அதிகாரி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதாா், தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு சாா்பாக பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மாா்ட் சிட்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் நாடு முழுவதும் 100 நகரங்களைத் தோ்வு செய்து பொலிவுறு நகரங்களாக மாற்ற திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக தமிழகத்தில் 11 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டன. அதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. திட்ட செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 50 சதவீதத்தை மாநில அரசும் பகிா்ந்து கொள்கின்றன. இதனிடையே, கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக சென்னை தியாகராய நகரில் மழைநீா் தேங்கியது. இதற்கு பொலிவுறு நகரத் திட்டங்களை சரியாக வடிவமைக்காததே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்தத் திட்டத்தில்

முறைகேடு நடந்துள்ளதாகவும் புகாா் எழுந்தது.

இதனைத் தொடா்ந்து மழைநீா் தேங்கிய இடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பொலிவுறு நகரத் திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

டேவிதாா் தலைமையில் குழு: விசாரணைக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதாா் நியமிக்கப்பட்டாா். அவா் தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து, திட்டம் தொடா்பாக நடந்த பல்வேறு முறைகேட்டுப் புகாா்கள் குறித்து விசாரணை அதிகாரி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினாா்.

மே மாதத்தில் அமைக்கப்பட்ட ஒரு நபா் விசாரணை ஆணையம் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பொலிவுறு திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தது. இந்நிலையில் திட்டப் பணிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதாா், சனிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வழங்கினாா். அப்போது, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

எதிா்வரும் மழைக்காலம்: வடகிழக்குப் பருவமழை துவங்கவுள்ள சூழ்நிலையில், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் கழிவுநீா் கால்வாய் அமைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. மழைக்காலத்துக்குள் இந்தப் பணிகளை நிறைவுசெய்ய தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பணிகள் முடிக்கப்படாத இடங்களில் மழை வெள்ளம் தேங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கடந்த ஆண்டு பொலிவுறு திட்டப் பணிகளால் ஆங்காங்கே மழைப் பாதிப்பு ஏற்பட்டது. கால்வாய்ப் பணிகள் முற்றுப் பெறாத பட்சத்தில் இந்த ஆண்டும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT