தமிழ்நாடு

எண்ணெய்ப் பனை சாகுபடியினை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

19th Aug 2022 04:06 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழ்நாட்டில் எண்ணெய்ப் பனை சாகுபடியினை அதிகரிக்க தமிழக அரசு ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, எண்ணெய்ப்பனைத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை ஆணையர் (ம) அரசுச் செயலர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய்ப் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையும் படிக்க | அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)

தமிழ்நாட்டில் நல்ல வடிகால் வசதியுடன் வளமான செம்மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்த களிமண் உள்ள நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் நமது மாநிலம் எண்ணெய்ப்பனை சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாகும். எண்ணெய்ப் பனை மரங்களை நாம் நன்கு பராமரித்து வந்தால், நான்காம் ஆண்டிலிருந்து எக்டருக்கு ஐந்து டன் வரையும், எட்டாவது வருடத்திலிருந்து 25-30 டன் வரையும் நிலையான மகசூல் தரவல்லது.

ADVERTISEMENT

எனவே, தமிழகத்தில் எண்ணெய் பனை சாகுபடிப்பரப்பை அதிகரித்து, பாமாயில் உற்பத்தியை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது பற்றிய விபரம் பின்வருமாறு.

1. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – எண்ணெய்ப்பனைத் திட்டத்தின் கீழ், நடவுக்குத் தேவையான தரமான எண்ணெய்ப் பனைக் கன்றுகள் முற்றிலும் இலவசமாக விவசாயிகளின் வயல்வெளிக்கே கொண்டு வந்து விநியோகம் செய்வதற்கு தனியார் நிறுவனம் மூலம் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2. நடவு முடிந்து முதல் நான்கு ஆண்டுகள் வரை இளம் எண்ணெய்ப் பனை மரங்களை நல்ல முறையில் பராமரிப்பதற்காக, ஒரு எக்டேருக்கு ரூ.5250/-ம், எண்ணெய்ப் பனை வயலில் ஊடுபயிர் சாகுபடி மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக எக்டருக்கு ரூ.5250/-ம் ஆக மொத்தம் எக்டேருக்கு ரூ10,500/- மானியமாக எண்ணெய்ப் பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

3. எண்ணெய்ப்பனைக்கு தேவையான பாசன வசதியினை உருவாக்கித்தருவதற்காக, ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.50,000/-ம், டீசல்/மின்சாதன பம்புசெட்கள் நிறுவ சிறு/குறு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.27,000/-ம், இதர விவசாயிகளுக்கு ரூ.22,500/- ம், எண்ணெய்ப் பனை வயல்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் அரசு வழங்குகிறது.

4. நடவு செய்த எண்ணெய்ப்பனை கன்றுகளை பாதுகாப்பதற்கு கம்பி வலைக்கு ரூ.20,000/-ம், பழக்குலைகளை அறுவடை செய்வதற்கான இயந்திரத்திற்கு ரூ.15,000/-ம், பழக்குலை வெட்டுவதற்காக எடை குறைவான அலுமினிய அரிவாள் கருவிக்கு ரூ.2,500/-ம், இலைவெட்டும் கருவிக்கு ரூ.50,000/-ம், சிறிய அளவிலான அலுமினிய ஏணிக்கு ரூ.5,000/-ம், சிறிய உழுவை இயந்திரத்திற்கு ரூ.2,00,000/-ம் மானியமாக வழங்கப்படுகிறது.

5. எண்ணெய்ப்பனையின் பழக்குலைகளுக்கு உத்திரவாத கொள்முதல் விலையாக எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை டன்னுக்கு ரூ.10,516/-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சந்தை நிலவரத்திற்கேற்ப இக்கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். 

6. விவசாயிகள் அறுவடை செய்த பழக்குலைகளை சேமித்து எண்ணெய் பிழியும் ஆலைகளுக்கு உடனடியாக அனுப்பும் வகையில், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, எண்ணெய்ப்பனை பழக்குலைகள் சேமிப்பு மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

7. கொள்முதல் செய்த 15 நாட்களுக்குள் அரசு நிர்ணயித்த விலையில் பழக்குலைக்கான விலையினை விவசாயியின் வங்கிக்கணக்கில் வரவு வைத்திடவும் அரசு வழிவகை செய்துள்ளது.

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – எண்ணெய்ப்பனைத் திட்டத்தின் கீழ் மேற்காணும் பணிகளை மேற்கொள்வதற்காக 2022-23 ஆம் ஆண்டில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு உங்கள் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

கொள்முதல் விலைக்கு உத்திரவாதம், பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகம் இல்லாதது, 25 முதல் 30 வருடங்களுக்கு நிலையான மாத வருமானம், சாகுபடிக்குத் தேவையான அனைத்து பணிகளுக்கும் அரசு மானியம் போன்ற காரணங்களால், எண்ணெய்ப்பனை சாகுபடியானது தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் சிறந்த மாற்றுப்பயிராக கருதப்படுகிறது. தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனுக்காக, ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – எண்ணெய்ப்பனைத் திட்டத்தில் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து, விவசாயிகள் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT